ப.சிதம்பரம் வயிற்று வலியால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

சனி அக்டோபர் 05, 2019

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் 21ந்தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம், நீதிமன்ற காவலில் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் அவரை தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், அவருடைய நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க கோரினார்கள்.

அதை ஏற்ற தனிக்கோர்ட்டு நீதிபதி அஜய் குமார் குஹர், ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை வருகிற 17ந்தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே, இந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு தனக்கு ஜாமீன் வழங்க மறுத்ததை எதிர்த்தும், தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய கோரியும் ப.சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தன்னை அவமதிக்கும் நோக்கத்தில் கைது செய்து சிறையில் வைத்து இருப்பதாகவும், வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே தண்டிக்கும் நோக்கத்தில் தன்னை நீண்ட நாட்களாக நீதிமன்ற காவலில் சிறையில் வைத்து இருப்பதாகவும், வழக்குகளில் ஜாமீன் வழங்குவதற்குத்தான் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.

தனது உடல்நிலை பலவீனமாக இருப்பதாகவும், 4 கிலோ எடை குறைந்து இருப்பதாகவும் மனுவில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் மனுசிங்வி ஆகியோர் ஆஜரானார்கள். சி.பி.ஐ. தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

விசாரணை தொடங்கியதும், இந்த மனு மீதான விசாரணையை வருகிற 15ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன், ப.சிதம்பரத்தின் மனு மீது 14ந்தேதிக்குள் பதில் மனுதாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தனர்.

இதனிடையே, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிறையில் உள்ள ப. சிதம்பரம் வயிற்று வலியால் இன்று அவதிப்பட்டு உள்ளார்.  இதனை தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைக்காக புதுடெல்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.