பேச்சைக் கேட்க உதவும் கண்ணாடி!

சனி நவம்பர் 07, 2020

கூகுள் தன் கண்ணாடி ஆராய்ச்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தாலும், 'பேஸ்புக்' அந்த ஆய்வை தொடர்கிறது. ஒரு கண்ணாடி வழியே நாம் காணும் சுற்றுப்புற காட்சிகளில், ஒரு, 'டிஜிட்டல்' காட்சி மற்றும் ஒலிப் படலத்தை சேர்த்தால், பல புதுமைகளை செய்ய முடியும்.

இதை, 'ஆக்மென்டெட் ரியாலிட்டி' என்றும் 'ஏ.ஆர்.,' என்றும் விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். தமிழில் மேம்படுத்தப்பட்ட மெய்மை எனவும் இதை சொல்லலாம்.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி,செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு உதவலாம் என,பேஸ்புக் விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

காது கேட்கும் கருவியை பொருத்திக்கொண்டாலும், சிலருக்கு விருந்துகள்,கூட்டங்கள்,கார் பயணம் போன்ற சூழல்களில், அக்கருவி உதவுவதில்லை. இதற்கு மாற்றாக,ஏ.ஆர்.,கண்ணாடிக் கருவி உள்வாங்கும் ஒலிகள் செயற்கை நுண்ணறிவு மென்பொருளால் வடிகட்டப்பட்டு,கண்ணாடி அணிபவரின் காதுகளுக்கு வரும்.

இதனால், சுற்றுப்புறத்தில், யாருடைய உரையாடலை அவர் கேட்க விரும்புகிறாரோ, அவை மட்டும் துாக்கலாக கேட்கும்படியும், பிற ஓசைகளை மட்டுப்படுத்தும் படியும் செய்யலாம்.

இத்தகைய சிறப்பு தொழில்நுட்பம் பல செவித்திறன் குறை உள்ளோருக்கு ஒரு வரமாக இருக்கும்.