பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு!

புதன் சனவரி 20, 2021

வரும் 27ஆம் திகதி பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சசிகலாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 27 ஆம் திகதி அன்று அவர் விடுதலையாக உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று சிறையில் சசிகலாவுக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அவர் பரப்பன அக்ரகாரா சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பிராணவாயுக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறைத்துறை அதிகாரிகள், சசிகலா அவர்களை சிறை மருத்துவமனையில் இருந்து போயிங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகிப்பதால் அவருக்குப் பரிசோதனை நடைபெற உள்ளது. அவர் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.