"பெப்சி"யைக் கைதூக்கி விடும் ஆட்சி அல்லவா தமிழகத்திலே நடைபெறுகிறது : மு.கருணாநிதி

சனி நவம்பர் 14, 2015

தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க பெப்சி குளிர்பான நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்தது தொடர்பாக இன்று முரசொலி நாளிதழில் கேள்வி-பதில் பகுதியில் பதலளித்துள்ள திமுக தலைவர் மு.கருணாநிதி,'பெப்சியைக் கைத்தூக்கி விடும் ஆட்சி அல்லவா தமிழகத்திலே நடைபெறுகிறது என கருத்து தெரிவித்துள்ளார். 

கேள்வி :- பணியிலே இருக்கும்போது இறந்து விடும் அரசு அலுவலர் குடும்பத்தின் உடனடித் தேவைக்காக வழங்கப்பட்டு வந்த முன்பணம் 5000 ரூபாய் என்பதை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருப்பதாகச் செய்தி வந்திருக்கிறதே?

கருணாநிதி பதில்: இந்தத் தொகை அரசு அலுவலர் குடும்பத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து வழங்கப்படுவதாகும். இதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதத்திலேயே சட்டப்பேரவையில் நிதி அமைச்சரால் தெரிவிக்கப் பட்ட போதிலும், அதற்கான அரசாணைதான் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு அ.தி.மு.க. அரசினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த அரசில் எதற்கு முனைப்பும் வேகமும் காட்டுகிறது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் கூறட்டுமா?

பதினைந்து கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள நிலத்திற்கு 100 ஆண்டுகளுக்கு மேலான காலத்திற்கு குத்தகைக்கு அமெரிக்க "பெப்சி" நிறுவனம் செலுத்தும் குத்தகைத் தொகை என்பது வெறும் ரூ.3,600/= (மூவாயிரத்து அறுநூறு ரூபாய்) மட்டுமே ஆகும்.
நெல்லை மாவட்டத்தில், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பிளாட் எண் க்ஷ-65 முதல் 
க்ஷ-76 வரையிலும், சர்வே எண்: 1641 யீவ, 1903 யீவ, 1904 யீவ (கங்கைகொண்டான் கிராமத்தில்), 36.00 ஏக்கர் பரப்பளவில், தாமிரபரணி ஆற்றில் இருந்து தினமும் 15 லட்சம் லிட்டர் நீரையெடுத்து அமெரிக்காவின் "பெப்சி" நிறுவனத்திற்கு தண்ணீர் மற்றும் குளிர் பானங்கள் தயாரிக்க 20-01-2014 இல் "பெப்சி" குளிர்பான நிறுவனம் அனுமதி கேட்டது. இதற்கு பதினைந்தே நாளில், தமிழக அரசு 05-02-2014 அன்று அமெரிக்காவின் "பெப்சி" நிறுவனத்திற்கு வரலாறு காணாத வேகத்தில் அனுமதி அளித்து, 99 ஆண்டுகளுக்கு 36 ஏக்கர் நிலம் ஒதுக்கி ஒப்பந்தம் போட்டுள்ளது. தற்போது பெப்சி நிறுவனம் அங்கு கட்டிட வேலைகளை வேகமாகச் செய்து வருகிறது. கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் "பெப்சி" நிறுவனத்தைத் துவக்க கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

தமிழகத்திற்குள் வந்த இவர்கள் ஆரம்பத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் நிலம் கேட்டார்கள். ஆனால் அங்கு மக்களின் எதிர்ப்புக் காரணமாக அந்தத் திட்டத்தைக் கைவிட்டனர். தற்போது சத்தமில்லாமல் கங்கைகொண்டானில் 36 ஏக்கர் நிலத்தை வாங்கி பூமிபூஜை போட்டு வேலைகளை வேகமாகச் செய்து வருகின்றனர். அரசு மதிப்பீட்டின்படி சிப்காட் வளாகத்தில் உள்ள 36 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.5,40,00,000/- (ஐந்து கோடியே நாற்பது இலட்சம் ரூபாய்). ஆனால் சந்தை மதிப்பின்படி இந்த 36 ஏக்கர் நிலத்தின் மதிப்பு பதினைந்து கோடி ரூபாய் ஆகும். இவ்வாறு பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்திற்கு அமெரிக்க "பெப்சி" குளிர்பான நிறுவனம், குத்தகைத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு, ஒரு ரூபாய் வீதம், 36 ஏக்கருக்கும், ஆண்டு ஒன்றுக்கு வெறும் முப்பத்தி ஆறு ரூபாய் மட்டுமே என 98 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள். இதிலே வேடிக்கை என்னவென்றால், 98 ஆண்டு களுக்குப் பிறகும்; 99ஆம் ஆண்டில், குத்தகைத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் வீதம் ஆண்டுக்கு 72 ரூபாய் குத்தகை; 36 ஏக்கருக்கு செலுத்த வேண்டும் என பெப்சி நிறுவனத்துடன் தமிழக அரசு ‘மாபெரும்' ஒப்பந்தம் போட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்திற்கு பல்வேறு நீரேற்றும் பம்புகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர், நெல்லை கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் அமையும் "பெப்சி" குளிர்பான ஆலைக்கு வழங்கப்படும். தினமும் 15 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் வழங்க அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது படிப்படியாக ஒரு கோடி லிட்டர் வரை கூட அதிகரிக்கும் நிலை உள்ளது. இதனால் வாரம் ஒரு நாள் மட்டுமே குடிதண்ணீர் பெற்று வரும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளுக்கும், தாமிரபரணி ஆற்றின் மூலம் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக் கும் கிடைத்து வரும் குடிநீரும், பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட உள்ளன.

பெப்சி குளிர்பான நிறுவனம் ஒரு லிட்டர் அக்வாபினா குடிநீர் பாட்டிலை ரூ.20/= ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளனர். ஒரு லிட்டர் குளிர் பானத்தை ரூ.60/= ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளனர். வரையறை அற்ற இந்த நீர்வளக் கொள்ளையால் தாமிரபரணி மூலம் நெல்லை -தூத்துக்குடியில் விவசாயம் நடந்து வரும் 86,000 ஏக்கர் விவசாய நிலமும் கடுமையாகப் பாதிக்கப் படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே தாமிரபரணி ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளையால் நீர்ப்பிடிப் புப் பகுதிகள் குறைந்து போய் வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து போன நிலையில், பெப்சி போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆற்று நீரை தினமும் பல லட்சம் லிட்டர் அளவுக்கு உறிஞ்சினால், தாமிரபரணியை நம்பி வாழும் விவசாயிகளின் எதிர்காலம் அழிந்தே போய் விடும். இதற்கான ஒப்பந்தத்தைத்தான் அ.தி.மு.க. அரசு பதினைந்தே நாட்களில் முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் முதலமைச்சர் 110வது விதியின் கீழ் பேரவையில் செய்த அறிவிப்புகள் எல்லாம் நாட் கணக்கில் அல்ல, மாதக்கணக்கில் தூங்குகின் றன. விவசாயத்தையும், குடிநீர்த் தேவையையும் காவு கொடுத்து, "பெப்சி"யைக் கைதூக்கி விடும் ஆட்சி அல்லவா தமிழகத்திலே நடைபெறுகிறது!