பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநரை அதிமுக அரசு வலியுறுத்த வேண்டும்!

சனி சனவரி 25, 2020

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநரை அதிமுக அரசு வலியுறுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பிப்ரவரி 2 முதல் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ள கையெழுத்து இயக்கத்துக்கு கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு பொதுமக்கள், மாணவர்கள், வணிகர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும்.

குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். நாங்கள் எங்களது எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டே இருப்போம். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

செங்கல்பட்டில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. 95 ஆண்டுகள் தமிழினத்துக்காக, தமிழகத்துக்காக குரல் கொடுத்த பெரியாரை இழிவுபடுத்துவது வெட்கப்பட வேண்டிய ஒன்று. பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீது ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.

7 பேர் விடுதலையில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போதாவது அதிமுக அரசு, ஆளுநரை வலியுறுத்த வேண்டும்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 17 சதவீதம் குறைந்துவிட்டது. நீட் விவகாரத்தில் அதிமுக அரசு இரட்டை நாடகத்தை நடத்தி வருகிறது. 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

ஜனநாயக நாடுகள் பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்னோக்கிப் போய் விட்டது. இதையெல்லாம் மறைத்து திசை திருப்பத்தான் மத்திய அரசு இந்த சதித் திட்டங்களைச் செய்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.