பேரறிவாளன் விடுதலை! குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும்?

புதன் சனவரி 20, 2021

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள தன்னை விடுவிக்க கோரி, பேரறிவாளன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், பேரறிவாளனை விடுவிப்பது குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று வாதிட்டார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். எனவே, தன்னை விடுவிக்க உத்தரவிடுமாறு ஆளுநருக்கு அறிவுறுத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான இறுதிக்கட்ட விசாரணை இன்று தொடங்கியது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ், பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவர் முடிவெடுப்பதா, ஆளுநர் முடிவெடுப்பதா என்ற சட்டப்பிரச்சினை இருப்பதாக தெரிவித்தார்.

பேரறிவாளனை விடுவிப்பதில் குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு பேரறிவாளன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் எதிர்ப்புத் தெரிவித்தார்.

பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் பேரறிவாளனை விடுவிப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெளிவுபடுத்தியுள்ள நிலையில், யார் முடிவெடுப்பது என்ற விவாதத்துக்கே இடமில்லை என்று கோபால் சங்கர நாராயணன் கூறினார்.

இந்நிலையில் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துள்ள நீதிமன்றம், தமிழக அரசு தரப்பு வாதத்தை நாளைக்கு கேட்கவுள்ளது.