பேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக பரோல் : நாளை வெளியில் வருகிறார் !

திங்கள் நவம்பர் 11, 2019

ராஜீவ் கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் ஏழுபேரில் ஒருவரான பேரறிவாளன் நாளை சிறையிலிருந்து இரண்டாம் முறையாக ஒரு மாத பரோலில் வெளியே வருகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது மனிதகுண்டு வெடிப்பு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கருணை அடிப்படையில் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

சிறையில் உள்ள 7 பேரும் தண்டனை காலம் முடிந்தும் 26 ஆண்டுகளாக சிறையிலேயே விடுவிக்கப்படாமல் உள்ளனர். பல்வேறு அரசியல் அவர்கள் விடுதலைக்குப்பின்னே உள்ளது. ஏழுபேரில் ஒருவரான பேரறிவாளன் பேட்டரி வாங்கி கொடுத்த குற்றத்துக்காக 20 வயதில் கைதானார்.

கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். சிறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் பேரறிவாளன். அவரை விடுதலைச் செய்யக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் போராடினார். ஆனாலும் விடுதலை இதுவரை சாத்தியமாகவில்லை.

கடந்த 2017-ம் ஆண்டு ஆக்ஸ்டு மாதம் பேரறிவாளன் தந்தை குயில்தாசனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து தனது மகனை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை வைத்தார். இதையடுத்து அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. பின்னர் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை ஏற்று பரோல் காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் பேரறிவாளன் தந்தை உடல் நலம் சரியில்லாததாலும், அவரது சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் அவரது தாய் அற்புதம்மாள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். அதையேற்ற சிறைத்துறை ஒரு மாதம் பரோல் வழங்கியுள்ளது.

இதையடுத்து நாளை பிற்பகல் 2 மணியளவில் பேரறிவாளன் பரோலில் வருகிறார். காவல் துறை பாதுகாப்புடன் பேரறிவாளன் ஒரு மாதம் பரோலில் ஜோலார்பேட்டைக்கு செல்ல உள்ளார்.

விதிகளுக்கு அப்பாற்பட்டு எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என சிறைத்துறை நிபந்தனை விதித்துள்ளது.