பேதங்களை மறந்து எல்லோரும் ஓரணியாகத் திரள்வோம்!

திங்கள் அக்டோபர் 11, 2021

சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்கள் விடுதலை பெறாமல் ஈழத் தமிழினம் விடுதலை பெறுவது சாத்தியமில்லை என்பதைத் தீர்க்க தரிசனமாக உணர்ந்திருந்தார் எமது தேசியத் தலைவர் அவர்கள். பெண்விடுதலையானது தேசவிடுதலை, சமூகவிடுதலை, பொருளாதாரவிடுதலை என்ற மும்முனைப் போராட்டம் என்பதையும், பெண்விடுதலை என்பது ஆண்களின் பெண்கள் பற்றிய கருத்தின் மீதான அறியாமையை நீக்கி அவர்களது அறிவுக்கண்ணைத் திறப்பதுமாகும் என்பதையும் தலைவர் அறிந்திருந்தார்.

அவரது சிந்தனையில் உதித்ததே எமது மகளிர் படையணியாகும். தமிழீழச் சுதந்திரப் பறவைகளாய் எமது பெண்கள் மிளிர்ந்தார்கள். பூக்களால் புயலாகவீசவும் முடியும் என்பதை நிதர்சனமாக கண்டோம். பெண்கள் தமது ஆளுமையை வெளிப்படுத்தினார்கள். களமாடினார்கள், கல்வியில் சிறந்து விளங்கினார்கள். பாசறை நிர்வாகிகளாக, களநிர்வாகிகளாக, கள மருத்துவர்களாக, சாரதிகளாக, காவல்துறையினராக, நீதித்துறையினராக என்று எல்லாவகையிலும், எல்லாத்துறைகளிலும் அரும்பணியாற்றினார்கள்.

தலைவர் அவர்களின் வழிகாட்டலிலே உருவாகி எமது மண்ணிலே அரும்பணி புரிந்து மாபெரும் தற்கொடையையும் புரிந்து சென்ற போராளிகளிலே முதல் பெண்போராளியாக வீரகாவியம் படைத்த இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்கள் வீரச்சாவைத் தனதாக்கிக் கொண்ட நாளையே நாம் தமிழீழப்பெண்கள் எழுச்சி நாளாகக் கொள்கிறோம்.

 2009 இல் பல உலக நாடுகள் சிறிலங்கா அரசுடன் சேர்ந்து செய்த சதியால் எம்மவர்களின் ஆயுதங்கள் மௌனித்தன. அதன் பின் தங்கள் உறவுகளை இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள். அவர்களின்  உறவுகள் தொடர் போராட்டங்களை நடாத்தி வருகிறார்கள். அவர்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. தன் பிள்ளைகளை காணாது தேடியலைந்த  பெற்றோர்கள் எத்தனையோ பேர் உயிரிழந்து விட்டனர். எனவே  இவர்களுக்கான விரைவான தீர்வொன்றை சர்வதேசத்திடம் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

எமது உயிரிலும் மேலான தமிழீழ மண்ணை மீட்பதற்காகவும் ஈழத்தமிழர்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காகவும் வீறு கொண்டெழுந்து போராடி எமது மண்ணில் விதைகளாக வீழ்ந்த எமது வீராங்கனைகள் ஆயிரம் ஆயிரமாய் எமது உள்ளக் கமலங்களிலே உன்னதமான இடத்தில் வீற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு இன்று சுடரேற்றி வணக்கம் செலுத்துவதற்கு கூட மக்களிற்கு உரிமை இல்லை. இது ஒரு தனி மனிதனின் அடிப்படை உரிமையை மதிக்காமல் சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது அரச அடக்கு முறையை பாவித்து,  தொடர்ந்தும் இன அழிப்பைச் செய்கின்றது. இன்றைய நாளில் இதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

உலகில் நாம் எங்கு வாழ்ந்தாலும், கல்வியாலும், பொருளாதார நிலையாலும், உயர்பதவிகளாலும் நாம் எவ்வளவு தான் உயரமாகப் பறந்தாலும் நாம் ஈழத்தழிழர் என்பதை மறந்து விட முடியாது, மறந்துவிடக் கூடாது.  வாருங்கள்! பேதங்களை மறந்து எல்லோரும் ஓரணியாகத் திரள்வோம்! எமது அடையாளமாக தாயகத்தில் வாழும் எமது இனச் சகோதரிகளுக்கு உறுதுணையாக உழைப்போம்.

நன்றி

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

மகளிர் அமைப்பு டென்மார்க்

இணைப்பு :