பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் தாமதமாகின்றமையே தொற்று நாடு முழுவதும் பரவக்காரணம்!!

புதன் நவம்பர் 04, 2020

கொரோனா நோயாளர்களை அடையாளம் கண்டுகொள்ள முன்னெடுக்கப்படுகிற பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் தாமதமாகின்றமையே தொற்று நாடு முழுவதும் பரவக்காரணம் என்று இலங்கையின் முன்னணி மருத்துவத் தொழிற்சங்கமாகிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் பேசிய அந்த சங்கத்தின் செயலாளரான விசேட மருத்துவ நிபுணர் செனால் பெர்ணான்டோ இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அரசாங்கத்திற்குப் பல தடவைகள் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளிவரும் தாமதங்கள் உள்ளிட்ட பல விடயங்களை சுட்டிக்காட்டிய போதிலும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இப்படியே சென்றால் முழு நாடுமே மீண்டும் முடக்கப்படும் அபாயம் அல்லது உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் அபாயமே ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கின்றார்.