பி.சுப்பிரமணியம் அவர்களின் ஜாமீன் விண்ணப்பம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரிப்பு!

செவ்வாய் பெப்ரவரி 11, 2020

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தாகக் குற்றம் சாட்டப்பட்ட பி. சுப்பிரமணியம் ஜாமீனைப் பெறத் தவறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் தொழிலதிபர் பி சுப்பிரமணியம் அவர்களின் ஜாமீன் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

நீதிபதி முகமட் ஜெய்னி மஸ்லான், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 130 ஜே-இன் கீழ் (Seksyen 130J Kanun Keseksaan) பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் சோஸ்மாவின் பிரிவு 13 படி ஜாமீன் அளிக்க முடியாத குற்றமாகும் என்று தீர்ப்பளித்தார்.

“சோஸ்மாவின் பிரிவு 13 அரசியலமைப்பிற்கு விரோதமானது, என்ற விண்ணப்பதாரரின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே விண்ணப்பதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது”, என்று அவர் கூறினார். செய்தியாளர்கள் சந்தித்தபோது, இந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதாக கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பரில், 57 வயதான சுப்பிரமணியம், ‘யு.எஸ். சுப்ரா சுப்ரமணியம்’ என்ற பெயரில் பேஸ்புக் பயன்பாட்டைப் பயன்படுத்தி  பயங்கரவாத குழுவிற்கு ஆதரவு அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.அவர் அக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 130 ஜே (1) (அ) இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், இது 30 ஆண்டுகள் வரை ஆயுள் தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படுகிறது, மேலும் குற்றம் சாட்டப்பட்ட பின்னர், குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட எந்தவொரு பொருளையும் பறிமுதல் செய்யப்படலாம்.