பீகார் தேர்தல் : நிதிஷ்-லாலு-காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

ஞாயிறு நவம்பர் 08, 2015

இந்திய பிரதமர் மோடி - பீகாரின் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் எதிரெதிர் கூட்டணியில் பீகார் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க, இந்த தேர்தல் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதோடு சமீப காலத்தில் இந்தியாவில் மதம் சார்ந்த முரண்பாடுகள் பெருகி வருவது பீகார் தேர்தலில் கூட பிரதிபலிக்கும் என விமர்சனங்கள் எழுந்தது.

இப்படியான் சூழலில் பீகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணியாகவும் பாஜக தலைமையில் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியாகவும் போட்டியிட்டன. ஐந்து கட்டங்களாக 'அக்டோபர் 12, 16, 28, நவம்பர் 1, 5' ஆகிய தேதிகளில் நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலின் முடிவு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. இந்த தேர்தலில் 56.80 % வாக்குகள் பதிவாகின, மொத்தம் 6.68 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர். 

இதில் நிதிஷ் தலைமையிலான மெகா கூட்டணி பெரும் முன்னிலை வகிப்பதால், நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராவது உறுதியாகியுள்ளது. 

தொகுதிகள் முன்னிலை நிலவரம்

மொத்த தொகுதிகள் - 243
நிதிஷ்- லாலு- காங்கிரஸ் கூட்டணி - 178
பாரதிய ஜனதா(பா.ஜ.க.) கூட்டணி - 54
இதர கட்சிகள் - 6

(தகவல்: தேர்தல் ஆணைய இணையதளம்)

திமுக தலைவர் மு.கருணாநிதி நிதிஷ் குமாருக்கு தெரிவித்துள்ள வாழ்த்தில் 'வெற்றிக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நல்லாட்சிக்கும், பொருளாதாரப் புலத்தில் உங்கள் ஆட்சியின் சாதனைகளுக்காகவும், சமூக நீதிக்கான உங்களது கடமை உணர்வுக்காகவும் பீகார் மக்கள் வாக்களித்தனர். மெகா கூட்டணிக்கும் உங்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.  

பா.ம.க.வைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ்நிதிஷ்குமாருக்கு எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில்,'பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களின் ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றிருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இந்திய வரலாற்றில் இது ஒரு சிறப்புமிக்க தருணம் ஆகும்.

உங்களின் தலைமையையும், பீகார் மாநிலத்தின் வளர்ச்சியில் நீங்கள் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் அங்கீகரிக்கும் வகையில் பீகார் மாநில மக்கள் உங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதை சமூக நீதிக்கும், வளர்ச்சிக்கும் கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன்.

உங்கள் தலைமையில் பீகார் முன்னேற்றம் அடைந்து வருகிறது. பீகார் வளர்ச்சியடைந்த மாநிலமாக உருவெடுக்க இன்னும் நீண்ட தொலைவு பயணம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை நான் அறிவேன். இதற்காக நீங்கள் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனினும், மிகச்சிறந்த தலைவரான நீங்கள் அனைத்துத் தடைகளையும் கடந்து வளமான, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பிஹாரை அழைத்துச் செல்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்' எனக் குறிப்பிடுள்ளார்.