பி.ஜே.பி கட்சியினர் நடத்த முயல்கிற வேல் யாத்திரையை தடை செய்யவேண்டுமென்கிற கோரிக்கை''

செவ்வாய் நவம்பர் 17, 2020

பி.ஜே.பி கட்சியினர் அமைதியாக இருக்கின்ற தமிழ்நாட்டில் "வேல் யாத்திரை" என்கிற பெயரில் ஒரு தொடர் பயணத்தை வகுத்து தமிழ்நாடு முழுக்க பயணம் செய்து தமிழர் கடவுளான முருகரின் அறுபடை வீடுகளையும் இணைத்து போகும் வழியில் மட்டுமல்லாது அந்த வழிகளுக்கும் சம்மந்தமில்லாத பாதைகளையும்  தேர்ந்தெடுத்து, திட்டமிட்டு இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை குறித்து அவதூறாக பேசி மத மோதலை உண்டாக்கும் எண்ணத்திலும் தமிழர் குடிகளுக்குள் சாதிய வன்மத்தை உருவாக்கி  தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றும் திட்டத்துடனும் இந்த யாத்திரையை நடத்த முயல்கிறார்கள்.
தற்போது தமிழக அரசானது, பி.ஜே.பி. யினர் மீண்டும் மீண்டும் நடத்த முயல்கிற வேல் யாத்திரைக்கு கொரோனாவை காரணம் காட்டி அனுமதி கொடுக்காத நிலையில் சட்டத்தை வளைக்கும் விதமாக டி.ஜி.பி.யான தங்களை நாடுகின்றனர். தான் பணி செய்யும் இடத்தில் சட்ட ஒழுங்கினை நிலைநிறுத்த வேண்டிய தாங்கள் இந்தயாத்திரைக்கு அனுமதி தரக்கூடாது என அறத்தோடு கேட்டுக்கொள்கிறேன். திருவள்ளுரில் யாத்திரையை தொடங்கிய முதல் நாளிலேயே அம்மாவட்டத்தின் எஸ்.பி திரு.அரவிந்தன் அவர்களை பி.ஜே.பி.யினர் சட்டையை பிடித்து தள்ளிய காணொளியை தங்கள் பார்வைக்கு முன்வைக்கிறேன். 
காவல்துறை உயரதிகாரி மீதே கைவைக்கிற இவர்கள் தமிழ்நாட்டில் எத்தகைய       கலவரத்தை ஏற்படுத்துவார்கள் என்பதை இதனையே ஒரு சான்றாக நீங்கள்                 எடுத்துக்கொள்ளலாம். எஸ்.பி. திரு.அரவிந்தன் மீது கைவைத்தவர்களை இதுவரை கைது செய்யாதது கூட வியப்பாகத்தான் இருக்கிறது.

சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்றால் தமிழக அரசு நீதிமன்றத்திலேயே தடை என்று சொன்னதற்கு பிறகும், மீண்டும் மீண்டும் அவர்கள் தமிழ்நாட்டில் யாத்திரையைத் தொடங்குவதும் பெயரளவில் அவர்களை கைது செய்வதும் சட்டத்தை கையாள்வோர் மீது சாமானியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாகவே இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தொடர்ந்து பி.ஜே.பி. யினர் நடத்த முயலும் வேல் யாத்திரைக்கு சட்டத்தின்படி தாங்களும் தடைவிதிக்க வேண்டுமென மீண்டுமொரு முறை உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

பேரன்போடு,
வ. கௌதமன் 

இணைப்பு :