பிரான்சில் ஆறாவது வாரத்தில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்!

ஞாயிறு ஓகஸ்ட் 16, 2020

 ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020 இன் ஆறாவது நாள் போட்டிகள் இன்று 16.08.2020 ஞாயிற்றுக்கிழமை சேர்ஜி பகுதியில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறுகிறது.

இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 22.07.1998 அன்று முல்லைத்தீவு மூன்றுமுறிப்பு பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலில் வீரச்சாவடைந்த 2 ஆம் லெப். கரிகாலன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன.  கடந்த 12.07.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வில்நெவ் சென்ஜோர்ஜ் பகுதியில் முதல் நாள் போட்டிகள் விறுவிறுப்பாக ஆரம்பமாகித் தொடர்ந்து ஐந்து வாரங்கள் கிறித்தைல் மற்றும் சேர்ஜி பகுதியிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.