பிரான்சில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்!!

ஞாயிறு பெப்ரவரி 10, 2019

பிரான்சில் தொடர்சியாக 13ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த யெலோ வெட்ஸ் அமைப்பினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்துள்ளனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக, தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், யெலோ வெஸ்ட் அமைப்பினரின் போராட்டமானது, நேற்று(சனிக்கிழமை) 13ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டது.

தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டு விலையேற்றம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.

சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார், ஆர்பாட்டகாரர்களை கட்டுப்படுத்த பல முனைகளிலும் போராடினர். எனினும் ஆர்பாட்டக்காரர்கள் பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதால் பொலிஸாருக்கும், ஆர்பாட்டகாரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.இதனைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தடியடி பிரயோகத்தையும் நடத்தியுள்ளனர். இதன்போது பலரும் காயமடைந்துள்ளனர்.

பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.