பிரான்சில் மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்த தமிழ்ச் சோலை 21 ஆவது முத்தமிழ் விழா!

புதன் மார்ச் 04, 2020

பிரான்சில் உள்ள அனைத்துத் தமிழ்ச்சோலைப் பள்ளிகளின் ஒருங்கிணைந்த 21 ஆவது முத்தமிழ் விழா பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் கடந்த (29.02.2020) சனிக்கிழமை  Savigny – le – Temple  பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்ற இந்நிகழ்வில் இன்னியம் அணிவகுப்புடன் விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர். விருந்தினர்கள், பிரமுகர்கள் மங்கல விளக்கேற்றியதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தமிழ்ச்சோலை கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து வணக்க நடனம் இடம்பெற்றது.

r


தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் சார்பில் திரு.சுரேஸ் அவர்களின் வரவேற்புரை இடம்பெற்றதையடுத்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.

வழமைபோன்று இம்முறையும் தமிழ்ச்சோலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன. எழுச்சி நடனங்கள், ஊரகநடனங்கள், சுளகு நடனம், மீனவ நடனம், ஒயிலாட்டம், குமரகவித்துவம், காலச்சக்கரம், கீர்த்தனை, நாடகங்கள், தாளலயம், கோலாட்டம், பறை இசை, குழுப்பாடல், பரதம், தண்ணுமை இசை, வயலின் இசை,  என கலை நிகழ்வுகளின் பட்டியல் தொடர்ந்தது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக டென்மார்க் நாட்டில் இருந்து வருகை தந்த உளவியல் மருத்துவர் கலாநிதி திரு.வீரவாகு சிறி கதிர்காமநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக  Savigny – le – Temple  உதவி நகர பிதா மற்றும் உறுப்பினர்களும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.மகேஸ், தமிழர் கல்விமேம்பாட்டுப்பேரவை மேலாளர் திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம், தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் திரு. பாலகுமாரன்  ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

t

உளவியல் மருத்துவர் கலாநிதி திரு. வீரவாகு சிறி கதிர்காமநாதன் அவர்கள் தனது சிறப்புரையில், இந்த நிகழ்வுகள் அனைத்தையும் நான் அவதானித்தபோது யாழ்ப்பாணத்தில் இருந்து பார்க்கின்றேனா அல்லது பிரான்சில் இருந்துதான் பார்க்கின்றேனா என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது, காரணம் அவ்வாளவு திறமையாக சிறு பிள்ளைகள் முதல் வளர்தமிழ் 12 வரை கற்கின்ற பிள்ளைகள் நிழ்ச்சிகளை நேர்த்தியாக வழங்கியிருந்தனர். அனைவரும் தமது பாத்திரங்களுக்குள் ஒன்றியிருந்தமை எமக்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இப்படியான நேர்த்தியான அழகான நிகழ்வுகளை உருவாக்கிய ஆசிரியர்கள் எவ்வளவு முயற்சி எடுத்திருப்பார்கள் என்பதே எனது சிந்தனை.  இவற்றை நான் ஒரு உளவியலானாகவே சிந்தித்துப் பார்க்கின்றேன்.

 எனது மனதில் பட்டவிடயம், இவ்வளவு வேகமாக இந்தப்பாடசாலைகள் போட்டிபோட்டுக்கொண்டு தமது நிகழ்வுகளை மேடையேற்றியுள்ளார்கள். குறித்த ஆசிரியர்கள் தமது நிகழ்வுகளில் குறைவரக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்கள். இவை வெறும் நிகழ்வுகள் அல்ல மிகவும் அருமையான படைப்புக்கள். அந்த ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். போட்டியென்பது மிகவும் அவசியம். போட்டிகளின் மூலமே புதிய விடயங்கள் பிறக்கும். அவ்வாறான போட்டிகள் நட்புக்கலந்தவையாக இருக்கவேண்டும். பொறாமைகள் இருக்கக்கூடாது என்பதாக அவருடைய சிறப்புரை தொடர்ந்தது.

தமிழர் கல்விமேம்பாட்டுப்பேரவை மேலாளர் திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம் அவர்கள் வளர்தமிழ் 12 ஆம் வகுப்பை நிறைவுசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் நினைவுப்பரிசையும் வழங்கிவைத்துவிட்டு தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருந்தபோது, இந்த 12 ஆம் வகுப்பை நிறைவுசெய்த அத்தனை மாணவர்களையும் வாழ்த்துவதில் கல்வி மேம்பாட்டுப் பேரவை பெருமைகொள்கின்றது. அன்பான மாணவச்செல்வங்களே, மழலையர் நிலையில் இருந்து வளர்தமிழ் 12 ஆம் வகுப்புவரைகற்றுமுடித்து நிற்கும் மாணவர்களை வாழ்த்துவதோடு, இவர்களை வழிநடத்திய ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரையும் நன்றியோடு வாழ்த்துகின்றோம். நீங்கள் இந்த சான்றிதழ்களை வீட்டில் வைத்துவிட்டு பிரெஞ்சு கற்கைக்குள் ஒரேயடியாகச் செல்லாமல் தமிழுக்கும் நேரத்தை ஒதுக்குங்கள் என்பதாக அவருடைய உரை தொடர்ந்தது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் சிறப்புரையினை வழங்கியிருந்தார். அவர்தனது உரையில் இந்தத் தமிழ்ச்சொலைத் தலைமைப்பணியகமானது, எமது தமிழுக்கு ஆற்றுகின்ற அத்தனை கைங்கரியங்களும் இந்தப் பிரான்சு நாட்டிலே போற்றப்படுகின்றன. ஐரோப்பியநாடுகளில் பகிரப்படுகின்றன. அத்தோடு பேசப்படுகின்றன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இந்தக்குழந்தைகளின் கல்வி,கலை,  கலாச்சாரம், பண்பாடு என அத்தனை அம்சங்களையும்  இந்த விடுதலை உணர்வையும் புகட்டுவதற்கென ஆசிரியர்களும், நிர்வாகிகளும் முயற்சித்துவருகின்றார்கள். இவர்களோடு பெற்றோர்களும் பயணித்துக்கொண்டிருக்கும் இந்தவேளையில், நாங்கள் சில விடயங்களைக் கவனத்தில்கொள்ளவேண்டும் என அவரது உரை தொடர்ந்தது.  

இந்நிகழ்வில்,  ஆண்டுமலர் வெளியீடு, திருக்குறள் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கல், தமிழ், தமிழ்கலை ஆசிரியர்களின் பத்தாண்டு மற்றும் இருபது ஆண்டு நிறைவுப்பணி மதிப்பளிப்பு, வளர்தமிழ் 12 தமிழ் பொதுத் தேர்வில் சித்திபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல் போன்றவை சிறப்பு நிகழ்வுகளாக இடம்பெற்றிருந்தன.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வெளியீட்டுப்பிரிவு தமது வெளியீடுகளை விற்பனைக்காகக் காட்சிப்படுத்தியிருந்தது. வழமைபோன்று தமிழீழ உணவகத்தினரும் தமது சேவையை திறம்பட வழங்கியிருந்தனர். அத்தோடு ரிரிஎன் தமிழ் ஒளி தொலைக்காட்சியினர், நிகழ்வுகளின் முக்கிய தருணக் காட்சிகளை புகைப்படங்களாக வழங்கும் சேவையையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்ச்சோலைத் தலைமையகத்தின் சார்பில் திரு.அகிலன் அவர்களால் குறித்த நிகழ்வுக்கு பங்காற்றிய அனைவருக்கும் நன்றி உரைக்கப்பட்டது.

நிகழ்வின் நிறைவில் தமிழ்ச்சோலைப் பள்ளிகளின் வளர்ச்சி நிதிக்காக தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தால் விற்பனை செய்யப்பட்ட நல்வாய்ப்புச் சீட்டுக்கள் குலுக்கப்பட்டு நல்வாய்ப்புப் பார்க்கப்பட்டன.

அதன் முடிவுகள் வருமாறு:-
 முதலாம் பரிசு (மடிக் கணினி) இல - 1716,
 இரண்டாம் பரிசு (இணைய நூல்)  இல - 2168
 மூன்றாம் பரிசு (வரை பட்டிகை) இல - 1800
 முதலாம் ஆறுதல் பரிசு இல - 2286
 இரண்டாம் ஆறுதல் பரிசு இல- 0787,
 மூன்றாம் ஆறுதல் பரிசு இல - 0887
தமிழ்மொழி வாழ்த்தினைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடனும்  நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.