பிரான்சில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தமிழீழ தேச தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்!

திங்கள் ஜூலை 06, 2020

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான (யூலை 05)  தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு 05.07.2020 ஞாயிற்றுக்கிழமை  பொபினிப் பகுதியில் மாலை 16.00 மணிக்கு மிகவும் எழுச்சி உணர்வோடும் கொரோனா தொற்று விதிமுறையின் கீழும் இடம்பெற்றது.

1

ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.செவ்வேள் அவர்கள் ஏற்றிவைத்தார்.

கரும்புலிகள் பொது உருவப்படம், கரும்புலி கப்டன் மில்லர், கடற்கரும்புலி கப்டன் அங்கயர்க்கண்ணி உள்ளிட்ட தற்கொடையாளர்களின் திருஉருவப் படங்களிற்கான ஈகைச் சுடர்களை,

27.12.2007 அன்று நெடுந்தீவுக் கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி ஈழவீரன்,
14.07.1991 அன்று வீரச்சாவடைந்த லெப்.குணேஸ் செல்வராஜா பேரின்பமோகன் ஆதவன்,

05.04.1996 யாழ்.ஆனைக்கோட்டைப் பகுதியில் சிறிலங்காப் படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை தர்மிலா தமயந்தி,

26.06.1989 அன்று பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இந்தியப் படையினருடனான மோதலில் வீரச்சாவடைந்த கப்டன் ரூபன் (இராசையா சிவகுமார்),

19.06.1990 அன்று யாழ்ப்பாணம், கோட்டை சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின் போது வீரச்சாவடைந்த வீரவேங்கை சதீஸ் (உமாபதி சதீஸ்குமார்),

27.05.1989 அன்று முல்லைத்தீவு தேவிபுரத்தில் இந்தியப்படையினரின் சுற்றிவளைப்பி;ன்போது விழுப்புண் அடைந்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்த வீரவேங்கை செந்தூரன் (உமாபதி சத்தியகுமார்)  

16.05.2008 அன்று முள்ளிக்குளம் பகுதியில் சிறிலங்காப் படையுடன் ஏற்பட்ட நேரடிமோதலில் வீச்சாவடைந்த கப்டன் சூரியதேவன் (கமலதாஸ் மரியதாஸ்),

02.04.2000 அன்று பளை இத்தாவில் பகுதியில் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவடைந்த 2-ம் லெப். காண்டீபன்,


20.04.1998 அன்று வீரச்சாவடைந்த மேஜர் விடுதலை (திருநாவுக்கரசு கமலவதனி),

07.03.2008 அன்று மணலாறு பகுதியில் வீரச்சாவடைந்த வீரவேங்கை லெப்.தமிழ்ப்பிரியா (குணரத்தினம் யாழினி)
17.09.2000 அன்று யாழ் சாவகச்சேரிப் பகுதியில் ஏற்பட்ட நேரடிமோதலில் வீரச்சாவடைந்த லெப்.பூங்கா,

20.06.1999 அன்று யாழ்.கொக்குவில் பகுதியில் சிறிலங்காப் படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவடைந்த மேஜர் இன்பன்

ஆகிய மாவீரர்களின் சகோதர சகோதரிகள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.  

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்கள் அணிவகுத்து சுடர்வணக்கம், மலர் வணக்கம் செலுத்தினர்.

2

அரங்க நிகழ்வுகளாக கரும்புலி மறவர்களின் நினைவுசுமந்த கவிதை, பேச்சு, தமிழீழ விடுதலைக் கானங்கள் இசைக்கப்பட்டதுடன், செவ்ரோன் தமிழ்ச்சோலை, பொபினி தமிழ்ச் சோலை மாணவிகளின் தமிழீழ எழுச்சிப்பாடலுக்கான நடனமும் சிறப்பாக இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் உரையாற்றிய நிர்வாகப் பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம் அவர்கள் கரும்புலிகளின் தற்கொடைகளை நினைவுகூர்ந்ததுடன் இன்றைய நிலைகுறித்து தமது கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்.

நிகழ்வில் விசேடமாகக் கலந்துகொண்ட பொபினி நகரசபை உறுப்பினரும் சீக் இன அமைப்பின் முக்கிய பிரதிநிதியுமான ரஞ்சித் சிங் அவர்கள், தமிழீழத் தடைநீக்கிகள் நினைவேந்தல் நிகழ்வு குறித்து பிரமித்து நின்றார். 

தன்னை இந்த நிகழ்விற்கு தன்னை அழைத்தமைக்கு தனது நன்றியறிதலை முதலில் வெளிப்படுத்தியிருந்தார். தமது இனமும் இவ்வாறு அடக்குமுறையைச் சந்தித்த ஓர் இனமே என்று தெரிவித்த அவர், அடக்குமுறையை சந்திக்கும் இனமக்கள் இவ்வாறு தொடர்ச்சியாகத் தமது செயற்பாடுகளின் ஊடாகக் குரல்கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றார். அத்தோடு, எமது மக்களுக்குத் தாம் ஆதரவுக்கரம் நீட்டுவதோடு, பொபினித் தமிழ்ச்சங்கத்தோடு இணைந்து பணியாற்றத் தாம் ஆர்வமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.   
 
பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் செல்வன் நிந்திலன் அவர்கள் உரைநிகழ்த்தியிருந்தார். அவர் இன்றைய காலத்தில் தாம் முன்னெடுத்துவரும் தமது செயற்பாடுகள் குறித்து தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
தமிழர் கலைபண்பாட்டுக்கழகக் கலைஞர்களின் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சிகானங்கள் நிகழ்வை மேலும் சிறப்பித்திருந்தன.

இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலை ஒருமித்த கலைஞர்களும் அரங்கில் அணிவகுத்துப்பாடத் தமிழீழத் தேசியக்கொடிகள் அனைவரின் கைகளிலும் பட்டொளிவீசிப் பறக்க, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற உணர்ச்சி மந்திரத்தோடு நிகழ்வுகள் யாவும் ஒரு மன நிறைவோடு நிறைவுகண்டன.