பிரான்சில் பேரெழுச்சி கொண்ட மே 18 முள்ளிவாய்க்கால் கவனயீர்ப்புப் பேரணி!

வியாழன் மே 19, 2022

பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 13ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (18.05.2022) புதன்கிழமை கடும் வெய்யிலுக்கு மத்தியில் பேரெழுச்சி கொண்டது.

பிற்பகல் 15.00 மணியளவில் பாரிஸ் நகரின் Place de la Republique பகுதியில் ஆரம்பமாகி Place de la Bastille பகுதியில் நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் பொதுச் சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு.பாலகுமாரன் அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச் சுடரினை மாவீரர் ஜூட் அவர்களின் சகோதரி ஏற்றிவைக்க, முள்ளிவாய்க்கால் மண்ணில் உறவுகளை இழந்த குடும்பஸ்தர் மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் அணிவகுத்து ஒவ்வொருவராக மலர்வணக்கம் செலுத்தியிருந்தனர். வீரம்செறிந்த முள்ளிவாய்க்கால் மண்ணும் நினைவேந்தலுக்கு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்நிகழ்வில் இம்முறை காவல்துறையினரால் தமிழீழத் தேசியக் கொடிகளைத் தாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட இளையோர்கள் தம்வசம் இருந்த கொடிகளை இறக்க மறுத்தனர். இதனால் காவல்துறையினர் விடாப்பிடி மேலும் விசனத்தை ஏற்படுத்திய நிலையில் ஏற்பாட்டாளர்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு, தேசியக் கொடியைத் தவிர்த்தே நிகழ்வினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இளையோர்களின் கைகளில் தேசியக் கொடி பறப்பதைத் தவிர்க்கமுடியவில்லை.

குர்திஸ்தான் மக்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர்.

பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக் கழக கலைஞர்கள் இலங்கையின் சமகால அரசியலை ஊர்திப் பவனியில் ஆற்றுகைப்படுத்தியிருந்தமை அனைவரையும் கவர்ந்திருந்தது.

தமிழ்ச்சோலை மாணவியரின் முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த எழுச்சி நடனமும் இடம்பெற்றது.

இறுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.