பிரான்சில் பிரத்தியேக மண்டபத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்

சனி நவம்பர் 28, 2020

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் 27.11.2020 வெள்ளிக்கிழமை பிரான்சில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் கோவிட் 19 அரச சட்டதிட்டங்களுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாட்டாளர்களோடு இடம்பெற்றது. பகல் 12.30 மணிக்கு பொதுச்சுடரினை பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப்பொறுப்பாளர் திரு.ஜெயகுமார் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு.மகேஸ் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவரின் 2008 ஆம் ஆண்டின் மாவீரர்நாள் உரையின் ஒளித்தொகுப்புக் காணொளி அகன்ற திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் 2020 மாவீரர் நாள் அறிக்கை ஒலிபரப்பப்பட்டது. 13.35 மணிக்கு (தாயகநேரம் 06.05 மணிக்கு) துயிலும் இல்ல மணியோசை ஒலித்ததைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாவீரர் லெப்.சங்கர் அவர்களின் திருவுருவப்படத்தின் முன்பாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. ஈகைச்சுடரினை 1999 ஆம் ஆண்டு கச்சதீவில் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் வாமன் மற்றும் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் நகுலன் ஆகிய இரு மாவீரர்களின் தாயார் ஏற்றிவைத்தார். லெப்.சங்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கான மலர் மாலையை 13.01.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலி வீரவேங்கை சுதாஜினி அவர்களின் சகோதரி அணிவித்தார். தாயகநேரம் 06.07 மணிக்கு துயிலும் இல்லப்பாடல் ஒலித்தபோது, கண்ணீர் மல்க அனைவரும் அனைத்து மாவீரர்களின் திருஉருவப்படங்களுக்கும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

j

சமநேரத்தில் பந்தன் துயிலும் இல்லத்தில் லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன், கேணல் பரிதி ஆகியோரின் கல்லறைகளில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், சார்சல் பகுதியில் அமைந்துள்ள லெப்.சங்கர் அவர்களின் நினைவுத்தூபியின் அருகில் மாவீரர் வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

பொதுமக்களின் நன்மை கருதி குறித்த மாவீரர் நாள் நினைவேந்தல்களை பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தினர் நேரலையில் ஒளிபரப்பியிருந்தனர்.

b

மண்டப நிகழ்வில் தொடர்ந்து மாவீரர் நினைவு தாங்கிய சில நிகழ்வுகளுடன் தேசியக்கொடி இறக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து ஓய்ந்ததும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் 2020 மாவீரர் நாள் நிகழ்வு நிறைவடைந்தது.