பிரான்சில் உணர்வடைந்த 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு!

திங்கள் செப்டம்பர் 13, 2021

கடந்த 2009 ஆம் ஆண்டு மே18 வரை தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவைத் தழுவியவர்களுள் இதுவரை மாவீரர்களாக அறிவிக்கப்படாதவர்களில் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு அனைத்துலக ரீதியில் அனைத்து நாடுகளில் இடம்பெற்ற அதேவேளை பிரான்சிலும் இன்று 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பி.ப. 15.00 முதல் பி.ப-18.00 மணிவரை Marx Dormoy மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாவீரர் பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு நிதிப்பொறுப்பாளர் திரு.செவ்வேள் அவர்கள் ஏற்றிவைக்க, மாவீரர் 2ஆம் லெப். ஆதவன் அவர்களின் சகோதரரும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளருமான திரு.மகேஸ் அவர்கள் மாவீரர் பொதுப் படத்திற்கான மலர்மாலையை அணிவித்தார்.

தொடர்ந்து, குறிப்பிட்ட 15 மாவீரர்களான வீரவேங்கை அஜந்தி, வீரவேங்கை அறிவு, வீரவேங்கை இதயன், வீரவேங்கை பிரியவதனா,வீரவேங்கை புவியரசன், வீரவேங்கை புதியவன், வீரவேங்கை தீப்பொறி, வீரவேங்கை அனபரசன்/லோறன்ஸ், வீரவேங்கை கவியரசி/அமலா,வீரவேங்கை முகிலன், வீரவேங்கை நிறையிசை, வீரவேங்கை கரிகாலன், வீரவேங்கை சுதாகரி, வீரவேங்கை இசைவாணன், வீரவேங்கை பல்லவன் ஆகிய மாவீரர்களின் திருஉருவப் படங்களுக்கான ஈகைச் சுடர்களை மாவீரர் குடும்ப உறவுகள் ஏற்றிவைத்து மலர்மாலை அணிவித்தனர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செய்தனர்.

தொடர்ந்து குறித்த 15 மாவீரர்கள் பற்றிய நினைவுப்பகிர்வை இவர்களோடு பணியாற்றியவர்களோடு ஏனைய பலரும் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் நினைவுரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில், குறித்த மாவீரர்களை நினைவேந்திய தருணங்கள் பற்றிக் குறிப்பிட்டதுடன், தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலை நினைவுகொள்ள நாம் அனைவரும் தயாராக வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியினை மாவீரர் குடும்பத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுப் பொறுப்பாளர் தேசியக் கொடியை கையளித்திருந்தார்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.