பிரான்சின் மூத்த கலைஞர்  அப்புத்துரை ரகுநாதன் அவர்களுக்கு இறுதி காணிக்கை

சனி ஏப்ரல் 25, 2020

பிரான்சின் மூத்த கலைஞர்  அப்புத்துரை ரகுநாதன் அவர்களுக்கு பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் தனது இறுதி வணக்கத்தை காணிக்கை செய்கின்றது.

தமிழ் சார் நல்லோர் கலையுலகம் அற்புதமான உன்னத கலைஞனை இழந்து நிற்கின்றது. 1935 இல் மலேசியாவில் பிறந்து தமிழீழத்தில் நவாலியில் வாழ்ந்து பிரான்சை புகலிட வாழ்விடமாக் கொண்டு வாழ்ந்த அப்புத்துரை ரகுநாதன் அவர்கள்  கடந்த 22.04.2020 பிரான்சு பாரிசில் சாவடைந்துள்ளமையானது அளவில்லாச் சோகத்தையும், வேதனையையும் தந்துள்ளது.

தனது வாழ்வையே கலையாகவும்,  கலையையே இலட்சியமாகவும் கொண்டு வாழ்ந்த உன்னத கலைஞனை இப்பேரிடர் காலத்தில் நாம் இழந்து நிற்கின்றோம். தனது நடிப்பாலும், கலைத்திறனாலும் அனைவர் மனங்களிலும் இடம்பிடித்திருந்தவர்.

இவரின் விடுதலைத்தாகமும், தமிழீழ தேசிய ஆன்மாமீது வைத்திருந்த பற்றும், பாசமும், அன்பும், நம்பிக்கையும் அளவில்லாதது. அந்தப்பற்றுதலோடும், பண்போடும் இறுதிவரை பயணித்தவர். நெருக்கடியான காலகட்டங்களில் மாவீரர் கப்டன் கஜனுடன் நாடகங்களாலும் கலைவெளிப்பாடுகளாலும்  தேசவிடுதலைக்கு  வலுசேர்த்தவர்.

திரைப்படத்துறையில் இருந்த அவாவும்,  வேட்கையும் தொடர்ந்து அதற்காகவே தன்னை அர்ப்பணித்திருந்தார். சிறந்த இளம் குறும்படக்கலைஞர்கள் இவருக்காகவே கதைகளை எழுதி, படங்களைத் தயாரித்து இவர் நடிப்பிலேயே சாதனைகளைப் படைத்து வெற்றியும் கண்டிருக்கின்றார்கள்.

திரைப்படத்தோற்றத்திற்கான முன்னணி நாடாக பிரான்சு இருப்பதால்தான் என்னவோ இவர் பிரான்சிலேயே தனது புலம்பெயர் வாழ்க்கையை வாழ்ந்திருந்தார். ஆனாலும் தனது கலைவாழ்வையும், அதன் படைப்பையும் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்லாது  கடல் கடந்து அவுஸ்ரேலியா, கனடா போன்ற நாடுகளிலும் நிலைநாட்டியிருந்தார்.

இவர் திரைப்படத்திலும்,  நாடக நடிப்பிலும்,  குறும்படங்களிலும் அற்புதமானதொரு நடிகன் என்பதோடு மட்டுமல்லாது கலைஞர்கள் அனைவரையும் தட்டிக்கொடுத்து கதைகள் பலசொல்லி மக்களிடம் சொல்லும் ஒவ்வொரு கருத்திலும் மிகுந்த கவனம் எடுத்துச்செயற்பட வேண்டும் என்பதை உணர்த்தியிருந்தவர்.

 ஓய்வில்லாத உளைச்சல் நித்திரையின்மை, தொடர்பயணங்கள்,உடலியல்த் தேய்மானங்கள் எல்லாமே   சராசரி மனிதனுக்கு  ஏற்படுத்துகின்ற நோய்நிலைக்கு இவர் தள்ளப்பட்டாலும், தனது சக்கரநாற்காலியில் இருந்து கொண்டே கலைப்பயணத்தை தொடர்ந்தவர்.

தனது கலைப்பணியை நூல்வடிவமாக கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுமிருந்ததோடு தனதுநெறியாளுகையில் நடித்த தொடர் நாடகத்தையும் வெளியிட முன்பே  எம்மை விட்டுப்பிரிந்துவிட்டார்.

ஆனாலும் அவரின் கலை நண்பர்கள் அதனை நிறைவேற்றி வைக்கவேண்டும். அதுவே இந்த உன்னதமான மூத்தகலைஞனுக்கு செய்யும் உண்மையான, இதயபூர்வமான இறுதி வணக்கமாக இருக்கமுடியும்.

இக்கலைஞனின் வாழ்விலும், கலைவாழ்விலும் என்றும் உறுதுணையாகவிருந்து அவரின் பிரிவால் துயருற்று நிற்கும் இவரின் துணைவியார், பிள்ளைகளோடும், மற்றும் கலைஞர்கள், மக்கள் அனைவரோடும் நாமும் எமது துயரினைப்பகிர்ந்து கொள்கின்றோம்.

தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் – பிரான்சு

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு