பிரான்சு பாரிசில் கறுப்பு யூலை 23 இன் 37 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு!

வெள்ளி ஜூலை 24, 2020

பிரான்சு பாரிசில் கறுப்பு யூலை 23 இன் 37 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு றிபப்ளிக் பகுதியில் இன்று (23.07.2020) வியாழக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு கோவிட் 19 சட்ட திட்டங்களுக்கு அமைவாக உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறிலங்கா காடையர்களால் 1983 யூலைக் கலவரத்தின்போது கோரமாகப் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்குமான நினைவுச்சுடரினை தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு. திருச்சோதி அவர்கள் ஏற்றிவைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன.

தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்கள் தமிழ், பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளிலும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்களும் கறுப்பு யூலை தொடர்பான விடயங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

பல்லின மக்களின் முன்பாக கறுப்பு யூலை நினைவுசுமந்த எழுச்சிகானங்கள் ஒலித்ததுடன், சிறிலங்கா இனவாத அரசின் தமிழின அழிப்புத் தொடர்பான சாட்சியங்களைக் கூறும் புகைப்படங்களும் பதாதைகளும் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பல வெளிநாட்டு மக்கள் ஆர்வத்துடன் எமது தமிழினத்துக்கு சிங்களப் பேரினவாதம் செய்த அநீதிகளை ஆர்வத்தோடு கேட்டுச்சென்றதையும் காணமுடிந்தது. பிரெஞ்சு, ஆங்கில மொழிகளிலான துண்டுப்பிரசுரங்களுடன் முகக்கவசங்களையும் செயற்பாட்டாளர் திரு.கஜன் அவர்கள் வழங்கியிருந்தார்.

தொடர்ந்து 17.00 மணியளவில் நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வு நிறைவுகண்டது.