பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்!

புதன் ஓகஸ்ட் 12, 2020

தமிழ்மொழிப் பொதுத்தேர்வு - 2020 இனை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடாத்துவது தொடர்பாகக்  கடந்த  26-07-2020  அன்று நந்தியாரில் நடைபெற்ற தமிழ்ச்சோலை நிர்வாகிகள் சந்திப்பில், 

தமிழ்ச்சோலை நிர்வாகிகளிடையே கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது.  இதன்போது 69.2 வீதமான நிர்வாகிகள் தேர்வு நடாத்துவதற்கு உடன்பட்டிருந்தனர். அத்துடன், தேர்வு நடாத்துவதா இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவானது .நாட்டு நிலைமையைக் கருத்திற்கொண்டு ஓகஸ்ட் இருபதாம் நாளன்று அறிவிக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

ஒக்டோபர் மாதத்தில் தேர்வு நடாத்தக்கூடிய சூழ்நிலை நிலவுமாயின், பெரும்பான்மையான நிர்வாகிகளின் கருத்திற்கமைய தேர்வினை நடாத்துவதற்கான முன்னேற்பாடுகளை நாம் மேற்கொண்டுவருகின்றோம். இதன்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு ஒக்டோபர் மாதம் தேர்வை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
 
ஆயினும், நாட்டுநிலைமை தேர்வு நடாத்துவதற்குப் பொருத்தமற்றதாக அமையுமாயின், இவ்வாண்டிற்கான தமிழ்மொழிப் பொதுத்தேர்வினை இரத்துச் செய்து, அதற்கான மாற்றுவழிகளைச் செயற்படுத்துவது தொடர்பாகவும் நாம் ஆலோசித்தவாறேயுள்ளோம்.
 
உள்ளிருப்பில் இருந்து வெளியேறி, மாணவர்கள் பள்ளிகளுக்கு வருதல் கட்டாயம் என்ற நிலைப்பாட்டை பிரான்சு அரசு எடுத்துள்ள நிலையில்,தமிழ்ச்சோலைகளும் செப்டெம்பர் முதல் வழமைபோல் இயங்கக் கூடியதாகவிருக்கும்  என எதிர்பார்க்கின்றோம். அதன்படி, தேர்வினையும் ஒக்டோபரில் நடாத்தக்கூடியதாகவிருக்கும் என்பது எமது நம்பிக்கை. எமது நம்பிக்கை கைகூடின், அரசின் சட்டதிட்டங்களுக்கேற்ப, சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாகத் தேர்வு நடைபெறும்.

எதிர்காலம் எப்படி அமையப்போகிறது என்பதை யாராலும் கணிக்கமுடியாதுள்ளது. நிச்சயமற்ற எதிர்காலத்திலும் தடைகளைப் படிக்கற்களாக்கி முன்னேற முயற்சிக்கவேண்டுமென்பது எம்மீதுள்ள கடப்பாடாகும். 


நம்பிக்கையுடன் தேர்வுக்கான பணிகளை முன்னெடுத்துவருகின்றோம். இதற்காக அனைவரதும் ஒத்துழைப்பை எதிர்பார்த்திருக்கின்றோம்.