பிரான்ஸ் நிலைமை: வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு?

செவ்வாய் அக்டோபர் 27, 2020

வார இறுதி நாட்களில் ஊரடங்கை முழு நேரமாக அதிகரிப்பதன் மூலம் பரீட்சார்த்தமாகப் பொது முடக்கத்தை அமுல்செய்யும் யோசனை அரச உயர்மட்டத்தில் ஆராயப்பட்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸில் ஒரு நாள் வைரஸ் தொற்று எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்திருப்பதை அடுத்து நாடெங்கும் மீண்டும் பொது முடக்கத்தை அமுல்செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்சமயம் அமுல்படுத்தப்படும் இரவு ஊரடங்கு வைரஸ் பரவலைத் தடுப்பதில் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வலுவான புதிய சுகாதாரக் கட்டுப்பாடுகளை அறிவிக்கவேண்டிய அவசரம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையில் –

பிரதமரின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்துக்கு சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நாடாளுமன்றக் கட்சிக் குழுக்களின் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அதிபர் மக்ரோன் பாதுகாப்புச் சபையின் நெருக்கடிகாலக் கூட்டங்களை இன்றும் நாளை புதன்கிழமையும் இரு தடவைகள் கூட்டுகின்றார்.

சனி, ஞாயிறு வார இறுதி நாட்களில் முழுநாள் ஊரடங்கை அறிவித்து பொது முடக்கத்தை ஏற்படுத்தி மக்களின் நடமாட்டத்தை முற்றாகக் கட்டுப்படுத்துவது உட்பட பல யோசனைகள் இக் கூட்டங்களில் பரிசீலிக்கப்படவுள்ளன என்று ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள பாடசாலைத் தவணை விடுமுறையை (vacances de la Toussaint) நீடிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஒன்றும் தொற்றுநோயியல் நிபுணர்களால் அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 2ஆம் திகதி பாடசாலைகளை- குறிப்பாக உயர் கல்லூரிகளை – மீளத் திறப்பதை ஒத்திவைக்க வேண்டும் என்ற அந்தக் கோரிக்கை அரச உயர்மட்டக் கூட்டங்களில் பரிசீலனைக்கு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இயன்றளவு விரைவாக நாடெங்கும் பொது முடக்கம் ஒன்றை அறிவிக்காவிட்டால் நாடு பேரனர்த்த நிலைமையை எதிர்கொள்ள வேண்டி வரலாம் என்று மக்கள் பிரதிநிதிகளும் மருத்துவ நிபுணர்களும் தொடர்ந்து அரசை எச்சரித்து வருகின்றனர்.

பிரான்ஸ் இரண்டாவது வைரஸ் அலையைத் தடுப்பதில் தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. எனவே வேல்ஸ், அயர்லாந்து போன்ற ஏனைய ஜரோப்பிய நாடுகளைப் பின்பற்றி பிரான்ஸும் நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கோருகின்றனர்.

எனினும் நாட்டை முழுவதுமாக முடக்குவது பொருளாதார ரீதியான பேரிழப்புக்கு வழிகோலும் என்பதால் முன்னர் போன்றல்லாமல் பொருளாதாரத்தோடு ஒத்திசைவான ஒரு பொது முடக்கத் திட்டத்தை அறிவிக்கலாம் என்றும் சிலர் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.