பிரான்ஸில் கொரோனா தொற்று வீழ்ச்சி

செவ்வாய் நவம்பர் 17, 2020

பிரான்ஸ் நாட்டில் தற்பொழுது இரண்டாவது முறையாக உள்ளிருப்பு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மீது தற்பொழுது மிகத் தீவீரமாகக் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

வழிபாட்டுத்தலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப் படிகின்றன.

நவம்பர் 16ம் திகதி திங்கட்கிழமை 24 மணி நேரத்தில் 58 பேர் பிரான்ஸ் வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று காரணமாக உயரிழந்துள்ளனர்.

இதுவரை 45054 பேர் பிரான்சில் கொரோனா தொற்றினால் இறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில், பிரான்ஸில் உணவகங்கள்,அருந்தகங்கள் அனைத்தும் வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி அல்லது முதலாம் திகதி பெப்ருவரி மாதம் 2021 வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Le Point பத்திரிகையில் வெளி வந்திருக்கும் இந்தத் தகவல் பிரெஞ்சு மக்களுக்குப் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

Bercy இல் அமைந்திருக்கும் பொருளாதார அமைச்சுடன் தொடர்புள்ளவர் ஒருவரால் இந்த தகவல் Le Point பத்திரிகைக்கு கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நச்சுயிரியின் பரவலுக்கு முக்கிய காரணிகளாக அருந்தகங்கள், உணவகங்கள் என்பன இனங்காணப்பட்டுள்ளன.

முதலாவது அலை என்று கூறப்பட்ட காலத்தில் இருந்து தற்பொழுது வரை உணவகங்களும் அருந்தகங்களும் அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் பொருளாதார அமைச்சினால் உதவிகள் இந்தத் துறையினருக்கு வழங்கப்பட்டாலும் அதிகமான உணவகங்கள் அருந்தகங்கள் நிரந்தரமாக மூடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் இந்த குளிர் காலத்தை கடக்க மாட்டாது மூடப்படலாம் என்ற அச்சமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸில் தற்பொழுது இரண்டாவது தடவையாக உள்ளிருப்பு நடவடிக்கை அமுலில் உள்ளது.

கொரோனா தொற்று ஒருநாள் குறைந்தும், அடுத்தநாள் அதிகரித்தும் நிலவி வருகிறது.

பிரான்ஸ் சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பிரான்ஸில் கொரோனா தொற்று குறைவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றைக்கட்டுப்படுத்துவதில் பிரான்ஸ் அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறது.

33497 பேர் வைத்தியசாலைகளில் தற்பொழுது அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
416 பேர் நொவெம்பர் 16ம் திகதி 24 மணிநேரத்தில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தாக்கம் சிறிது சிறிதாக குறைந்து வருவதன் அடையாளமாக 9406 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் இப்பொழுது கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம், ஆனாலும் எங்களுடைய நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தாது மேலும் சிறிது காலம் பாதுகாப்பாக வாழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று பிரான்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சர் Olivier Véran வழங்கிய செவ்வி ஒன்றில் தெரிவித்தார்.