பிரான்ஸில் தொடரும் கட்டுப்பாடுகள் – உணவகங்கள் ஜனவரி வரையில் ‘பூட்டு’

வெள்ளி நவம்பர் 27, 2020

பிரான்ஸ் பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ் தலைமையில் பத்திரிகையாளர் மாநாடு பரிஸில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த மாநாட்டில் அரசாங்கத்தின் சில அமைச்சர்களும் பங்குபற்றியிருந்தனர்.

சுகாதார அமைச்சர் Olivier Véran, தொழில்துறை அமைச்சர் Elisabeth borne, கலாசாரத்துறை அமைச்சர் Roselyne Bachelot, சிறு கைத்தொழில் துறை அமைச்சர் Alain griset ஆகியோருடன் பிரதமர் Jean Castex அவர்களும் மாநாட்டுக்குத் தலைமை ஏற்றுக் கலந்துகொண்டார்.

பிரான்ஸ் நாட்டின் அதிபர் Emmanuel Macron செவ்வாய்க்கிழமை நிகழ்த்திய உரையின் அடிப்படையில் கொரோனா தொற்றுக்கு எதிரானபுதிய நடவடிக்கைகள் பற்றிய விளக்கங்களை வழங்குவதற்காக இந்த பத்திரிகையாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரான்ஸில் கொரோனா வைரஸ் தாக்கம் இப்பொழுது சிறிது சிறிதாக குறைவடைந்து வருவதாகவும், ஆனால் “நாங்கள் அவதானமாக இருந்து அன்பாக நடந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

2021 ஜனவரி மாதம் வரை உணவகங்கள் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவித்த பிரதமர், உணவக உரிமையாளர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என்றும், 2021 ஆம் ஆண்டு பிரெஞ்சு உணவுகளின் ஆண்டாக அறிவிக்கப்பட்டு உணவகங்களை முதன்மைப்படுத்த விருப்பதாகவும் தெரிவித்தார்.

வழிபாட்டுத் தலங்களில் 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதை உறுதிப்படுத்திய பிரதமர், பனிச்சறுக்கு விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நான்கு விடயங்களை இப்பொழுது கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறிய அவர், tester protéger alerter soigner பரிசோதித்தல் பாதுகாப்பாக இருத்தல் எச்சரிக்கையாக இருத்தல் சுகப்படுத்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய சுகாதார அமைச்சர்இப்படியே கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து கொண்டு போனால் ஜனாதிபதி அறிவித்தது போன்று டிசம்பர் மாதம் இரண்டாவது வாரம், ஐயாயிரத்துக்கு குறைவானவர்களே நாட்டில் கொரோனா பாதிப்புடையவர்களாக இருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அத்துடன் தடுப்பூசிகள் வருட இறுதிக்குள் வந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாநாட்டில் கருத்து தெரிவித்த கலாசார அமைச்சர், திரையரங்குகள் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும் என்றும் அங்கிருந்து வீட்டுக்குச் செல்வதற்கு அத்தாட்சியாக பற்றுச் சீட்டுக்கள் போதுமானவை என்றும் தெரிவித்தார்.

  • பாரிஸிலிருந்து அருண் சண்முகலிங்கம்