பிரான்ஸின் நிலைமை என்ன?

புதன் நவம்பர் 25, 2020

பிரான்ஸ் வாழ் மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவல் மக்ரோன் – Emmanuel Macron அவர்களின் உரை 24ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு எட்டு மணிக்கு தொலைக்காட்சி வழியாக ஒளிபரப்பானது.

அவர் தமது உரையில் உள்ளிருப்பு நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளித்திருந்தார்.

மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த உள்ளிருப்பு நடவடிக்கையில் இருந்து வெளிவருவதற்கு முன்னர் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியம் உணர்த்தப்பட்டுள்ளது.

பிரான்சில் covid-19 அனர்த்தங்களால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை இறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரை மணி நேரமாக எலிசே – Élysée மாளிகையிலிருந்து மக்களுக்கான இந்த உரையை அதிபர் வழங்கினார்.

உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றைக்கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளையும் விரிவாக நாட்டு மக்களுக்கு அதிபர் எடுத்துக்கூறினார்.

வரும் 28ம் திகதி முதல் அனைத்து வியாபார நிலையங்களும் திறக்கப்படலாம் என அறிவித்தார்.

ஆனால் இவை இரவு 9 மணிக்கு மூடப்பட வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இந்த நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடனேயே வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படுகின்றன.

வழிபாட்டுத்தலங்கள் வரும் சனி ஞாயிறு தினங்களில் இருந்து திறக்கப்படும் என்றும் அங்கு பூஜைகள் ஆராதனைகள் தொழுகைகள் நடைபெறலாம் என்றும் 30 பேருக்கு உட்பட்டவர்களே இவற்றில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

வீட்டிலிருந்து வெளியில் செல்வதற்கானஅனுமதிப்பத்திரம் அவசியமானது!

அந்த அனுமதி அத்தாட்சிப் பத்திரம் 20 கிலோமீட்டர் தூரம் வரையும் 3 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளிருப்பு நடவடிக்கை தொடர்ந்து இருக்கும் என்றும் 15ம் திகதி டிசம்பர் மாதம் வரை இது நீடிக்கும் என்றும் அதிபர் மக்ரோன் தெரிவித்தார்.

இணையத்தளம் ஊடாகப் பணி செய்வதை ஊக்குவிப்பதாகவும், பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வெளியே நடைபெறும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயதானவர்களுக்கும் உடல் உபாதை உள்ளவர்களுக்குமான கண்காணிப்புகள் பலப்படுத்தப்படும்.

டிசம்பர் மாதம் 15ம் திகதி உள்ளிருப்பு நடவடிக்கையில் இருந்து நாடு வெளிவந்தாலும் அன்றிலிருந்து ஊரடங்கு நடவடிக்கை ஆரம்பமாகும் என்றும் அந்த ஊரடங்கு இரவு 9 மணியில் இருந்து அதிகாலை வரை நீடிக்கும் என்றும் அதிபர் தெரிவித்தார்.

பாடசாலை விடுமுறை நாட்கள் ஆரம்பிக்கும் 18 டிசம்பரின் பின்பு பிரெஞ்சு மக்கள் மாகாணங்களில் இருந்து மாகாணங்களுக்கு பிரயாணம் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது.

எதுவித அத்தாட்சிப் பத்திரமும் வைத்திருக்க வேண்டியதில்லை.

ஊரடங்கு நடவடிக்கை நத்தார் பண்டிகையை முன்னிட்டும் புதுவருட கொண்டாட்டங்களை முன்னிட்டும் தளர்த்தப்படும்.

டிசம்பர் 24ம் திகதி இரவும் டிசம்பர் 31ம் திகதி இரவும் ஊரடங்கு நாட்டில் தளர்த்தப்படும்.

ஆனால் பொது இடங்களில் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 15ம் திகதியிலிருந்து அருங்காட்சியகங்கள், திரையரங்குகள் திறக்கப்படலாம், ஆனால் ஊரடங்கு நேரத்தை பின்பற்ற வேண்டும்.

நத்தார் விடுமுறை நாட்களில் பிரெஞ்சு மக்கள் விரும்பி செல்லுமிடங்களில் மலைகளில் உள்ள பனிச்சறுக்கு விளையாட்டும் உள்ளடங்கும்.
நத்தார் பண்டிகைக் காலங்களில் பனிச்சறுக்கு விளையாட்டு இடங்கள் மூடப்பட்டிருக்கும்.

இவை தொடங்கப்படும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

மக்கள் கூடுதலாக எதிர்பார்த்த றெஸ்ரோரன்ட் – கபே – restaurant – café போன்றவை வரும் ஜனவரி மாதம் 20ம் திகதிக்குப் பின்னர் தான் திறக்கப்படலாம்.

பிரான்சில் கொரோனா தொற்று ஐயாயிரத்துக்குக் குறைவாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

பார் லே புவாத் து நுயி – bar les boîtes de nuit இப்பொழுது திறக்கப்பட மாட்டாது.

மூன்றாவது அலையைத் தடுப்பதற்காகவே இப்பொழுது இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சொந்தங்களைப் பாதுகாக்கவேண்டும், அவதானமாக இருக்க வேண்டும்.
முகக்கவசம்அணியவேண்டும்.

வீட்டில் இருந்தாலும் அவற்றை அணிந்திருக்க வேண்டும்.

வீடுகளில் கூடுதலானவர்கள் ஒன்றுகூட வேண்டாம்.

தடுப்பூசி சுகாதார திணைக்களத்தினால் உறுதி செய்யப்பட்டால் வரும் டிசம்பர் கடைசியில் இருந்து வயதானவர்களுக்கும் உடல் உபாதை உள்ளவர்களுக்கும் முதலில் வழங்கப்படும்.

தடுப்பூசி செலுத்துவது கட்டாயப் படுத்தப்பட மாட்டாது.

tous anti-covid செயலியை நாட்டு மக்கள் அனைவரும் தரவிறக்கம் செய்து பாவிக்க வேண்டும்.

இதுவரை 10 மில்லியன் மக்கள் மட்டுமே இந்த செயலியை தரவிறக்கம் செய்துள்ளனர்.

இந்த செயலியின் மூலம் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட ஒருவரையோ அல்லது அவருடன் தொடர்பு கொண்டவரையோ கண்டுபிடிக்க இலகுவாக இருக்கும்.
இதனால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு வசதியாக இருக்கும்.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் உதவிகள் அரசாங்கத்தினால் வழங்கப்படும்.

மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உள்ளிருப்பு ஊரடங்கு என்பவை அனைத்தும் நாட்டில் உள்ள அனைவரையும் காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்டவையே என்பதை பிரான்ஸ் அதிபர் தமது உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.