பிரான்ஸின் நிலைமை: இரண்டாவது அலை எதிர்பாராத வேகம்

செவ்வாய் அக்டோபர் 27, 2020

பிரான்ஸில் கொரோனா இரண்டாவது அலையின் வேகமும் பாதிப்புகளும் எதிர்பார்த்ததுக்கு மாறாக அதிர்ச்சி அளிக்கின்றன என்று அரசுக்கு ஆலோசனை வழங்கும் அறிவியல் குழுவின் தலைவர்Jean-François Delfraissy தெரிவித்திருக்கிறார்.


தற்போதைய சுகாதார நெருக்கடி குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு செவ்வி அளித்தபோதே அவர் இப்படித் தெரிவித்திருக்கிறார்.

நாடெங்கும் 24 மணிநேரத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதனை அடுத்தே அறிவியல் குழுத் தலைவரது இந்தக் கருத்து வெளியாகி இருக்கிறது.

“ஒரேநாளில் 50 ஆயிரம் பேர் என்பது உண்மையில் நாளாந்தம் ஒருலட்சம் பேர்வரை தொற்றுக்குள்ளாகின்றனர்” என்பதைக் குறிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொற்றின் தற்போதைய நிலைவரத்தை “எதிர்பாராததும் சிக்கலானதும் மிக ஆபத்தானதுமான நிலை” என்று அறிவியல் குழு மதிப்பிட்டுள்ளது.

“நாட்டு மக்களில் பலர் எத்தகைய ஆபத்து வரவிருக்கிறது என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள்” என்றும் அறிவியல் குழுவின்(Scientific Council) தலைவர் கவலை வெளியிட்டிருக்கிறார்.

வைரஸின் முதலாவது அலையை விட இரண்டாவது அலையின் வீச்சு பலமாக உள்ளது. சுகாதாரக் கட்டமைப்புகள் மீது அடுத்த சில வாரங்களில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் – என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.