பிரான்ஸிடம் இருந்து முதல் ரஃபேல் போர் விமானத்தைப் பெறுகிறார் ராஜ்நாத் சிங்!

செவ்வாய் அக்டோபர் 08, 2019

இந்திய விமானப்படை நிறுவன நாள் மற்றும் விஜயதசமி நாளான இன்று பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து முதல் ரஃபேல் போர் விமானத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முறைப்படி பெற்றுக்கொள்கிறார்.

பிரான்ஸின் ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடமிருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ல் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

பிரான்ஸின் துறைமுக நகரமான போர்டோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இதற்காக நேற்று ராஜ்நாத் சிங் பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார். முதலில் இன்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரனுடன் சந்தித்துப் பேச உள்ளார். இந்தச் சந்திப்பில் இரு நாடுகளின் பாதுகாப்பு, வர்த்தகம், நட்புறவு மேம்பாடு, ஆயுதக் கொள்முதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் பேசுகின்றனர்.

பிரான்ஸ் அதிபரின் சந்திப்புக்குப் பின் மெரிக்னா நகரத்துக்கு விமானத்தில் செல்லும் ராஜ்நாத் சிங், அங்கிருந்து துறைமுக நகரான போர்டோவுக்குச் செல்கிறார். அதன்பின் அங்கு நடக்கும் ரஃபேல் போர் விமானத்தை பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். இந்திய விமானப் படை சார்பில் விஜயதசமி நாளில் கொண்டாடப்படும் சாஸ்த்ரா பூஜையிலும் அவர் பங்கேற்கிறார். இதற்கான விரிவான ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "போர்டோ நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் முறைப்படி ரஃபேல் போர் விமானத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொள்கிறார். அதன்பின் சாஸ்த்ரா பூஜை நடக்கிறது அதிலும் ராஜ்நாத் சிங் பங்கேற்று, ரஃபேல் போர் விமானத்திலும் பயணிக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், டசால்ட் நிறுவன அதிகாரிகள், இந்திய விமானப்படை மூத்த அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்" எனத் தெரிவித்தார்.

முதல் ரஃபேல் போர் விமானம் முறைப்படி இன்று ஒப்படைக்கப்பட்டாலும், 2020-ம் ஆண்டு மே மாதம் தான் இந்திய வானில் ரஃபேல் விமானங்கள் பறக்கும். இந்தியாவில் ரஃபேல் போர் விமானங்களுக்கான உள்கட்டமைப்பு மற்றும் விமானிகளுக்கான பயிற்சி உள்ளிட்ட முன்னேற்பாடுகளை, விமானப் படை நிறைவு செய்துள்ளது.

ரஃபேல் போர் விமானங்களின் முதல் தொகுதி, ஹரியாணாவில் உள்ள அம்பாலா விமானப் படை தளத்திலும். இரண்டாவது தொகுதி, மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிமரா விமானப் படை தளத்திலும் நிறுத்தப்பட உள்ளது.