பிரேமலதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!

செவ்வாய் அக்டோபர் 01, 2019

இடதுசாரி கட்சிகளுக்கு தி.மு.க. ரூ. 25 கோடி நிதி கொடுத்ததாக பிரேமலதா கூறியதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் மின்வாரிய பணிகள், பாலங்கள் கட்டுமானம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டார்.

அந்த பணிகள் எந்த அளவு நடைபெற்றுள்ளது என்பதை விவரித்தார். அப்போது நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- தேர்தல் பணிகளுக்காக இடதுசாரி கட்சிகளுக்கு தி.மு.க. ரூ. 25 கோடி நிதி கொடுத்ததாக வந்த தகவல்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டும் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கூறி இருக்கிறாரே?

பதில்:- அதுபற்றி பிரேமலதாவுக்கும், உங்களுக்கும் பதில் செல்ல வேண்டிய அவசியமில்லை. அது சம்பந்தப்பட்டிருக்க கூடிய வருமான வரித்துறை, தேர்தல் கமி‌ஷன் இவர்களுக்குத்தான் நான் பதில் சொல்ல வேண்டும். ஏற்கனவே அங்கு பதில் சொல்லி விட்டேன்.

கேள்வி:- பிரதமர் மோடி வருகையை எப்படி பார்க்கிறீர்கள்? தமிழ் மொழி உலகின் பழமையான மொழி என்று மோடி பேசி இருக்கிறாரே? முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரிடம் கோரிக்கை மனுவும் கொடுத்துள்ளாரே?

பதில்:- 8 வருடமாக இந்த ஆட்சியில் இருக்க கூடியவர்கள் பிரதமரிடமும், மந்திரிகளிடமும்தான் கொடுத்து கொண்டிருக்கிறார்களே தவிர, அந்த மனுக்களுக்கு உரிய நடவடிக்கை இது வரை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதுதான் நான் அறிந்தது.இவ்வாறு அவர் கூறினார்.