பிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத்தின் 20 ஆவது அகவை !

வெள்ளி ஏப்ரல் 19, 2019

பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான Goussainville பகுதியில் குசான்வில் பிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத்தின் 20 ஆவது அகவை நிறைவுவிழா கடந்த (14.04.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் இடம்பெற்றது.

மங்கலவிளக்கேற்றப்பட்டு, அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச்சோலை கீதம் இசைக்கப்பட்டது.

மங்கல விளக்கினை முதன்மைவிருந்தினர் குசான்வீல் நகரபிதா திரு.அலன் லூயி, துணை நகரபிதா திருவாட்டி எலிசபேத் பிறீ, குசான்வில் பிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.காணிக்கைநாதன், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு செயற்பாட்டாளர் திரு.காணிக்கைநாதன் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.  

வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து வரவேற்புரையையும் தலைமையுரையையும் குசான்வில் பிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.காணிக்கைநாதன் அவர்கள் ஆற்றியிருந்தார்.

நிகழ்வில முதன்மைவிருந்தினர் குசான்வீல் நகரபிதா திரு.அலன் லூயி, துணை நகரபிதா திருவாட்டி எலிசபேத் பிறீ ஆகியோர் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டிருந்தார். 

பிரதம விருந்தினர் உரையைத் தொடர்ந்து குசான்வில் தமிழ்ச்சோலை ஆசிரியர்கள் பிரதம விருந்தினரால் மதிப்பளிக்கப்பட்டனர்.தொடர்ந்து குசான்வில் தமிழ்ச்சோலை மாணவ மாணவிகளின் அரங்க நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன. நடனங்கள், எழுச்சிநடனங்கள், பாடல்கள், கவிதைகள், பேச்சுக்கள், நாடகங்கள் என அனைத்தும் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் தமிழ்ச்சோலை மாணவர்களால் மிகவும் சிறப்பாக ஆற்றுகைப்படுத்தப்பட்டிருந்தன. நிகழ்வில், வழமைபோன்று தமிழ்மொழித் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பாடசாலையில் நடாத்தப்பட்ட ஆங்கிலத்தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள், திருக்குறள் திறன்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள், தமிழ்க்கலைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் விருந்தினர்களால் வெற்றிக்கிண்ணம், பதக்கம், சான்றிதழ் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்..

சிறப்புரைகளை, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா, தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தேர்வுப் பிரிவுப் பொறுப்பாளர்; திரு.அகிலன் ஆகியோர் ஆற்றியிருந்தனர். 

தொடர்ந்து நிகழ்வு சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி உரைக்கப்பட்டது. நிகழ்வில் மற்றொரு சிறப்பு நிகழ்வாக 20 ஆவது ஆண்டு சிறப்பு மலரும் வெளியிட்டுவைக்கப்பட்டது. மலரின் முதற்பிரதியை குசான்வீல் தமிழ்ச் சங்கத்தலைவர் திரு.காணிக்கை நாதன் அவர்கள் வெளியிட்டுவைக்க பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் பெற்றுக்கொண்டார்.  தொடர்ந்து சிறப்புவிருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.  

அனைத்து மாணவ மாணவியர்களும் இணைந்து தமிழ்மொழி வாழ்த்து இசைத்ததைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்தது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடனும் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.