பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு ஒன்று கூடல்!

வெள்ளி மே 17, 2019

பிரித்தானிய பிரதமர் வாயிற்தளத்திற்கு முன்னால் நடைபெற்றுவருகின்ற முள்ளிவாய்க்கால்

நினைவேந்தல் வாரத்தின் ஐந்தாம் நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமானது (15.05.2019) மாலை 5.15 மணி அளவில் எழுச்சி உரைகளைத் தொடர்ந்து அடையாள உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு திரு இந்திரன் ஐயா அவர்கள் பழச்சாறு வழங்கி வைக்க நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. 

40 இற்கும் மேற்பட்ட தமிழீழ உணர்வாளர்கள் நேற்றைய தினம் அடையாள உண்ணாவிரதத்தினை மேற்கொண்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் நெருங்கும் நிலையில் பிரித்தானிய நாடாளுமன்றில் இடம்பெற்ற நினைவு ஒன்றுகூடலில் தமிழர்களுக்கு அனைத்துலக நீதி கிட்டுவதை பிரித்தானியாவின் தொழிற்கட்சித் தலைமை வலியுறுத்தியுள்ளது. 

பிரித்தானிய நாடாளுமன்றின் பிரதான கட்டிடத் தொகுதியில் உள்ள பத்தாவது கேட்போர் கூடத்தில், தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா அவர்களின் அனுசரணையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு ஒன்றுகூடலில் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் பங்கேற்று உரையாற்றினார்.பத்து ஆண்டுகள் எட்டிய நிலையிலும் தமக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பிற்கு நீதிகிட்டாத நிலையில் தமிழர்கள் இருப்பதையிட்டு தனது கவலையை வெளியிட்ட ஜெரமி கோர்பின், தமிழர்களுக்கு நீதி கிட்டுவதற்காக தொழிற்கட்சி தொடர்ந்து பாடுபடும் என்று குறிப்பிட்டார்.

  நினைவு ஒன்றுகூடலில் தொழிற்கட்சியின் உயர்நிலைத் தலைவர்கள் - நிழல் அமைச்சர்கள் உட்பட பல முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமிழர்களுக்காக குரல்கொடுத்தனர். முன்னதாக நேற்று முன்தினம் 14.05.2019 செவ்வாய்க்கிழமை பிரித்தானிய மகாராணியாரின் அதிகாரபூர்வ நிழல் நிதி அமைச்சரும், தொழிற்கட்சியின் இரண்டாம் தலைவருமான ஜோன் மக்டொனல் அவர்கள் பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களின் பிரதிநிதிகளை சந்தித்து தொழிற்கட்சியிடம் இருந்து தமிழர்கள் எதிர்ப்பார்க்கும் அரசியல் செயற்பாடுகள் பற்றிக் கேட்டறிந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

d