பிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்

சனி மே 23, 2020

மே 18, 2020 அன்று, பிரித்தானிய வெளியுறவு செயலாளரான டொமினிக் ராப்( Dominic Raab), இங்கிலாந்து மற்றும் இனப்படுகொலை இலங்கைக்கு இடையிலான “நெருங்கிய உறவு” குறித்து அவரும் இலங்கை அமைச்சர் டி.சி.ஆர் குணவர்தனவும் உரையாடியதாக Twitter செய்தியாக வெளியிட்டார். வெளியுறவு செயலாளரின் Twitter இல் சிங்கள சிங்கக் கொடி மற்றும் Union Jack ஆகியவை அடங்கும். பிரித்தானிய தமிழ் இளையோர்  அமைப்பினர் (TYO-UK) மற்றும் பதினான்கு தமிழ் மாணவர் சங்கங்கள்  இணைந்து இதற்கு பதிலளித்தனர். அதில் “இலங்கை அரசாங்கத்துடனான இங்கிலாந்தின் நெருங்கிய உறவைப் பற்றிய உங்கள் செய்தி, தமிழ் சமூகத்திற்கு கசப்பானது,” என தெரிவித்துள்ளனர். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கோவிட் -19 தாக்கத்தில் இருந்த போது டொமினிக் ராப் துணை பிரதமராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய தமிழ் இளையோர்  அமைப்பு (TYO-UK), அங்கு வாழும் தமிழ் இளையோர்களையும் மாணவர் சங்கங்களையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டு செய்தியை டொமினிக் ரபிற்கு அனுப்பி, "இலங்கையில் எவ்வளவு கபடத்தனமான நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது" என்பதை அவருக்கு நினைவூட்டியது.

மேலும், காலனித்துவ ஆட்சியின் போது பிரித்தானிய அரசால் இலங்கையில் ஒற்றையாட்சி அரசு உருவாக்கப்பட்டது, எனவே பிரித்தானிய அரசிற்கு தமிழர்களை  இனப்படுகொலையிலிருந்து பாதுகாக்கும் தார்மீகக் கடமை உள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

“சமீபத்தில், பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்த தமிழ் மக்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததற்காக பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவை நீதிமன்றத்தில் முன் நிறுத்தி பிரித்தானிய தமிழ் சமூகம் தங்களுக்கான நீதியை நாடி சென்றது. இந்த வழக்கு எங்களுக்கு ஆதரவாகக் கண்டறியப்பட்டாலும், பிரிகேடியர் பெர்னாண்டோ இலங்கைக்கு தப்பி ஓடினார், அங்கு 2020 மே 18 அன்று எங்கள் நினைவு நாளில், அவர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார், ”என்று TYO UK இன் அறிக்கை தெரிவித்துள்ளது.

 Liberal Democrats கட்சியின் செயல்பாட்டு இணைத் தலைவரான சேர் எட் டேவி, Ilford தெற்கு Labour கட்சி நாடளுமன்ற உறுப்பினர் சாம் டாரி மற்றும் Harrow கிழக்கு conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாப் பிளாக்மேன் ஆகியோர் “இனப்படுகொலை” என்ற வார்த்தையை தங்களது மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள் செய்திகளில் பயன்படுத்தினர். எவ்வாறாயினும், டொமினிக் ராப் போன்ற உயர்மட்ட ஆளும் conservative கட்சியின் அரசியல்வாதிகள் கொழும்புடனான புவிசார் அரசியல் நடவடிக்கைகளைத் தக்கவைத்துக்கொள்வதில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மே 19 அன்று இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷாவின் ஆத்திரமூட்டும் “ரணவீரு” (ஹீரோக்களுக்கான சிங்கள சொல்) தின உரைக்கு இங்கிலாந்து இன்னும் பதிலளிக்கவில்லை. அவர் உரையில் "நமது நாட்டையும் நமது போர்வீரர்களையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி தொடர்ந்து குறிவைக்கும் எந்தவொரு சர்வதேச நாடுகளிடமிருந்தோ அமைப்புகளிலிருந்தோ இலங்கையை விலக்கிக் கொள்ள நான் தயங்கமாட்டேன்" என்று பதிவு செய்துள்ளார்.
அத்தகைய சூழலில், Union Jack மே 18 அன்று Twitter இல் சிங்கள சிங்கத்துடன்  கைகுலுக்கியது “கசப்பானது” மட்டுமல்ல, பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு நேரடியான அவமானம்.

1833 Colebrooke Cameron ஆணைக்குழு, 1931 Donoughmore அரசியலமைப்பு  மற்றும்  1944 Soulbury ஆணைக்குழு போன்றவையில் இருந்து நீண்ட காலமாக பிரித்தானிய அரசாங்கம் தமிழர்களின் பிரச்சனைக்கு மூல காரணமாக இருந்து வருகின்றது.

ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை தாக்குதலின் போது, ஐக்கிய நாடுகள் சபையில் பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதியாக இருந்த (ஆகஸ்ட் 2007 முதல் நவம்பர் 2009 வரை) சேர் ஜான் சாவர்ஸ் கூறினார்: “தமிழ் புலிகள் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பு மற்றும்  இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாக  தமிழ் புலிகளின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இவை முடிவுக்கு வரப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ” சாவர்ஸ் பின்னர் MI6 இன் தலைவராக நியமிக்கப்பட்டார் (நவம்பர் 2009 நவம்பர் 2014 வரை) என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தருணம் பிரித்தானிய  அரசிடம் வற்புறுத்துவது யாதெனில்.

- தமிழினப் படுகொலைக்கான நீதி நிலை நாட்டப்படுவதற்காக சர்வதேச விசாரணைக்கு ஆதரவளித்தல்

- தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க அதிகார பூர்வமாக கோரிக்கை வைத்தல்

- தமிழர் தயாகப் பகுதிகளில் இருந்து சிங்கள படைகளை உடனடியாக அகற்றுவதற்கு கோரிக்கை வைத்தல்
 
- பிரித்தானிய அரசு தமிழர்களை ஒரு தனித்துவமான இனமாக அங்கீகரித்தல். தமிழர் தாயகத்தை அங்கீகரித்தல் மற்றும் தமிழர்களுக்கான சுநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்.

- பிரித்தானிய அரசு தமிழீழ தனியரசுக்கான சர்வஜன வாக்கெடுப்பில் புலம்பெயர் மக்களும் தாயக மக்களும் பங்குகொள்வதற்கு ஆதரவளித்தல்.

போன்ற விடயங்களை வலியுறுத்தி பிரித்தானிய வெளியுறவு செயலாளரான டொமினிக் ராப்( Dominic Raab) இற்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.