பிரிட்டீஷாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 12 வயது சிறுவன்...!

வியாழன் நவம்பர் 14, 2019

முன்னாள் இந்திய கிரிக்கெட் அதிரடி தொடக்க வீரர் விரேந்திர சேவாக், தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் காலனிய பிரிட்டிஷ் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 12 வயது சுதந்திரப் போராட்ட வீரரின் படத்தை வெளியிட்டு குழந்தைகள் தினத்தன்று உருக்கமான பதிவை மேற்கொண்டுள்ளார்.

1938ம் ஆண்டு பாஜி ராவ்த் என்ற இந்த 12 வயதுச் சிறுவன் நாட்டுப்படகு ஒன்றை வைத்திருந்த போது பிராமணி நதியைக் கடந்து சென்று தங்களை இறக்கி விடுமாறு காலனிய பிரிட்டிஷ் படையினர் சிறுவனிடம் கேட்டுள்ளனர், ஆனால் பிரிட்டிஷ் படையினர் கிராமங்களில் மேற்கொண்டு வரும் அராஜகங்களை ஏற்கெனவே கேள்விப்பட்ட அந்தச் சிறுவன் அவர்களை படகில் அழைத்துச் செல்ல மறுத்து விட்டான். இதனையடுத்து ஆத்திரம் அடைந்த அராஜக பிரிட்டிஷ் படைகள் சிறுவன் என்றும் பாராமல் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுக் கொன்ற சம்பவத்தை விரேந்திர சேவாக் மிக உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

பாஜி ராவுத் அக்.5, 1926-ல் ஒடிஷாவில் நிலகந்தபூர் கிராமத்தில் பிறந்தவன். இவன் தந்தையை சிறு வயதில் இழந்து விட்டான், தாயார் வீட்டு வேலை செய்து வாழ்வாதாரத்தைப் பராமரித்தார்.

ஒடிசா அரசின் முயற்சியின் காரணமாக இந்தச் சிறுவன் சுதந்திரப் போராட்ட வீரனாக போற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2 ஆண்டுகளுக்கு முன்பாகவும் பாஜி ராவுத் பற்றிய பதிவை சேவாக் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.