பிரதமர் மோடியை விமர்சித்து ட்வீட்! விமானியை வேலையிலிருந்து தூக்கிய நிறுவனம்-

ஞாயிறு சனவரி 10, 2021

"கோ ஏர்" என்ற தனியார் விமான நிறுவனத்தில் மூத்த பைலட்டாக பணியாற்றிவருபவர் மிகி மாலிக். இவர் கடந்த வியாழக்கிழமை பிரதமர் மோடி குறித்து தன்னுடைய ட்விட்டர் கணக்கில் கடுமையான விமர்சிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார்.

அவருடைய ட்விட்டர் பதிவில் ‘பிரதமர் ஒரு முட்டாள். நீங்கள் என்னை மீண்டும் அதே வார்த்தை சொல்லி என்னை அழைக்கலாம். எனக்கு அது பிரச்னை அல்ல. ஏனென்றால் நான் பிரதமர் அல்ல. ஆனால் "பிரதமர் ஒரு முட்டாள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரின் கருத்திற்கு மோடியின் ஆதரவாளர்களின் மத்தியில் பெரும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், தன்னுடைய பதிவினை நீக்கினார்.

மேலும் தன்னுடைய ட்விட்டர் கணக்கையும் முடக்கியிருந்தார். இந்நிலையில் தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் நான் சார்ந்த "கோ ஏர்" நிறுவனத்திற்கும் என்னுடைய கருத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் , இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்வும் விளக்கம் அளித்துள்ளார்.

இருப்பினும் பைலட் மிகி மாலிக்கின் விளக்கத்தை ஏற்காத "கோ ஏர்" நிறுவனம் அவரைப் பணியிலிருந்து நீக்கியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த "கோ ஏர்" நிறுவனம், ‘கோ ஏர்" நிறுவன ஊழியர்கள் நிறுவனத்தின் பணியாளர்கள் விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதனை மீறுபவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,

மேலும் அவர்கள் மீது எந்த கருணையும் காட்டப்படாது என்று "கோ ஏர்" நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூகவலைதளத்தில் பதிவிடப்படும் கருத்துக்காக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது "கோ ஏர்" நிறுவனத்துக்கு இது முதல்முறையல்ல. 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் சீதா மற்றும் இந்து மதம் குறித்து விமர்சனத்துக்குரிய கருத்து பதிவிட்டதற்காக பயிற்சி விமானியை "கோ ஏர்" நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.