பல்....!

புதன் நவம்பர் 20, 2019

முந்திப் போலில்லை நானிப்போ.
என் பற்களெல்லாம்
விழுந்து தொலைந்து விட்டன.
என் வேட்டை வீரம் ஆட்டங்கண்டு விட்டது.
என் கட்டுப்பற்களைக் கொண்டு
நானினி வாய்ச்சவாடல் செய்ய முடியாது.
இந்த வாயை வைத்துக் கொண்டு
அமைதியாயிருப்பதே நல்லது.
முன்னரைப் போல் உறுமிச் சிலிர்த்து
இரை தேடுதல் இனி நடவாத காரியம்.
பல்லில்லை என்றாலும்
எனக்குப் பசிக்கிறது தான்.
வேறேதும்
தந்திரங்களைக் கற்றாக வேண்டும்.
என் கையறு நிலையறிந்ததும்
இரைகள் என்னை
விட்டு வைத்திருக்கின்றன.
பழக்க தோசத்தில் வாலைத் தூக்கி
நானென்
வாயைப் புண்ணாக்கி விடக் கூடாது.
இனி நான் எல்லாவற்றையும்
தடவித் தடவித் தான்
மெதுமெதுாக வாங்க வேண்டும்.
இல்லையேல்
எனக்குப் பேரப் பிள்ளைகள் பிறந்து
அவர்களுக்குக்
கொழுக்கட்டை கொட்டுகிற நாளுக்காய் காத்திருக்க வேண்டும்.

- தீபிகா-
20.11.2019
11.56 Am.