பலம் இல்லாத இனம் பிணம் தானோ?

வெள்ளி ஜூலை 26, 2019

பலமாய் இல்லாத இனம், பிணமாய் இருக்கவேண்டும் என்பது உயிரினங்களின் தோற்றத்தை விளக்கிய சார்ள்ஸ் டார்வினின் தத்துவக் கோட்பாடாக இருக்கின்றது.

மனித இனம் மட்டுமல்ல எந்தவொரு உயிரினமும் பலமாக இல்லாது போனால், அது ஏனைய இனங்களால் ஒரு கட்டத்தில் முற்றாக அழிக்கப்பட்டுவிடும் என்பதுதான் அவரது ஆய்வின் உட்பரிமாணமாக இருந்தது. பலமான இனம் என்பது,அதன் தோற்றத்தையோ அல்லது அதன் எண்ணிக்கையையோ வைத்து தீர்மானிக்கப்படுவதல்ல. அது தன் இனத்தை அழிந்துபோய்விடாது பாதுகாத்துத்தக்கவைப்பதற்கு தன் பலத்தைப் பிரயோகித்து எவ்வாறு போராடுகின்றது என்பதைப் பொறுத்தது.

இந்தப் பூமிப் பந்தில் மிக நீண்ட வரலாற்றையும் மொழியையும் கொண்டது தமிழினம். உலகப் பரப்பெங்கும் தமிழினம் பரவியிருந்தாலும், மொழியையும் அதன் கலாச்சாரத் தொன்மையையும் பாதுகாத்து இனத்தின் அடையாளத்தை எதிர்காலத்தில் தக்கவைக்கக்கூடிய ஒற்றைத் தேசமாக தமிழ் மக்களுக்கு எஞ்சியிருப்பது தமிழீழம் மட்டுமே.எந்த வொரு மொழிக்கும் ஒரு தேசம் இல்லாது போனால் அந்த மொழி காலப்போக்கில் வழக்கொழிந்து அழிந்து போய்விடும் என்பது வரலாறு.

உலகில் செம்மொழிகள் என்ற பெருமைக்கு தமிழ் மொழியும் சீன மொழியுமே இப்போதும் மக்கள் பேச்சு வழக்குப் பாவனையில் இருக்கின்றன.

இதே பெருமைக்குரிய இலத்தீன், ஹீப்ரு, சமஸ்கிருதம் எல்லாம் பேச்சு வழக்கிழந்து மொழியளவில் நின்றுவிட்டன.

சீன மொழிக்கு ஒரு தேசம் இருப்பதனால் அந்த மொழி இன்னும் நீடித்து நிலைத்து வாழும்.ஆனால் தமிழ் மொழியின் நிலை?

தமிழ் வாழ்க என்று சொல்வதனால் அந்த மொழி வாழ்ந்து விடப்போவதில்லை.அந்த மொழியை பேணிப் பாதுகாத்து வழி நடத்தும் ஒரு ஆளும் தேசம் வேண்டும்.

தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வாழையடி வாழையாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மண் தமிழீழம். அந்த மண்ணை சிங்கள தேசம் ஆக்கரிமித்துக்கொள்ள முயன்றபோது, தமிழர்களைவிடப் பலமடங்கு அதிகமான சிங்கள தேசத்திடம் இருந்து தமிழர் தாயக மண்ணைப் பாதுகாத்து நின்றது விடுதலைப் புலிகளின் பலம் மட்டுமே.அந்தப் பலம்தான் இனத்தை மட்டுமல்ல மொழியையும் அழிவில் இருந்து பாதுகாத்தது.

விடுதலைப் புலிகளின் பலமே தமிழினத்தையும் மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்து நின்றது. தமிழர்களின் இந்தப் பலத்தை அழிப்பதன் மூலமே இலங்கைத் தீவை சிங்கள, பெளத்த தேசமாக மாற்றமுடியும் என்ற தங்கள் மகாவம்சச் சிந்தனையில்,விடுதலைப் புலிகளை அழிக்க சிங்களப் பேரினவாத சக்திகள் தமிழர்கள் மீது போரைத்தொடுத்தனர்.

விடுதலைப் புலிகளின் பலத்தின் முன்னால், தங்களால் அது முடியாது போய்விடுமோ என்ற அச்சமே, பின்னர் இந்தியாவை இந்தப் போருக்குள் இழுத்துவிடக் காரணமாக அமைந்தது. தமிழர்களின் பலத்தை அழிப்பதற்கு சிங்கள தேசம் இந்தியாவைப் பயன்படுத்திக்கொண்டது. ஆனால், கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாக, இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்குள் விடுதலைப் புலிகள் இன்னும் பலம் கொண்ட இனமாக மீண்டெழுந்தனர்.

இதனால், பயங்கரவாதம் என்ற முத்திரையைக் குத்தி விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சர்வதேசத்தை களத்தில் இறக்கிவிட்டது சிறீலங்கா.

பயங்கரவாதத்தை அழிப்பது என்ற பெயரில் தமிழர்களின் பலத்தை அழிப்பதில் சிங்கள தேசத்திற்கு தோளோடு தோள் நின்றன உலக நாடுகள் பல. தம் சொந்த மக்களின் ஆதரவுத் தளத்தில் எழுந்துநின்ற விடுதலைப் புலிகளால், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அழிக்கவந்த சர்வதேசத்தின் பலத்திற்கு ஈடுகொடுக்க முடியில்லை. தமிழர்களின் ஒற்றைப் பாதுகாப்பை சர்வதேச சக்திகளின் துணையுடன் தகர்த்தெறிந்து தமிழர்களின் பலத்தை அழித்தது சிறீலங்கா.

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் அழிக்கப்பட்டால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்று இலவம் காத்த சர்வதேசம், சிங்கள தேசத்தின் உண்மையான சுயரூபத்தைக் கண்டுகொண்ட பின்பும் இப்போதுகூட வாய் திறப்பதில்லை. மாறாக இன்னமும் சிங்கள தேசத்திற்தே தோள் கொடுத்தே நிற்கின்றது.

தமிழர்களின் பலம் அழிக்கப்பட்டதனாலும், சர்வதேசத்தின் ஆதரவுக் கரம் நீளுவதாலும் இலங்கைத் தீவை சிங்கள, பெளத்த தேசமாக்கும் அதன் மகவம்சக் கனவு இப்போது நனவாகத் தொடங்கியுள்ளது. அதன் ஆக்கிரமிப்புச் செயற்திட்டம் இப்போது மிகவும் வேகம் எடுத்துள்ளது. நயினாதீவு, நாவற்குழி, நாயாறு, தையிட்டி, கன்னியா... என தமிழர்களின் தாயகப் பரப்பெங்கும் பெளத்த விகாரைகள் பெருகத் தொடங்கிவிட்டன. அதுவும் தமிழர்களின் நீண்ட வரலாற்றுப் புகழ்மிக்க ஆலயங்களைத் தகர்த்து இந்த ஆக்கிரமிப்பு அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.

தமிழீழ தேசம் மட்டுமன்றி தமிழர்கள் வாழும் மலையகம் வரை இந்த பெளத்த சிங்கள ஆக்கிரமிப்பு வேகமெடுத்துள்ளது.

பலமாக இருந்தபோது தம் தாயக மண்ணை மீட்டெடுப்பதற்குப் போராடிய தமிழினம், இப்போது கோயில் நிலங்களை மீட்பதற்கும் குரல் எழுப்பமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கட்டியயழுப்பப்பட்ட விகாரைகளையும், புத்தர் சிலைகளையும் இனி எந்தக் காலத்திலும் தகர்ப்பதற்கு சிங்கள தேசம் அனுமதிக்கப்போவதில்லை.

இந்த ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்தும் சக்தியும் இப்போது யாருக்கும் இல்லை. மாரி காலத்துத் தவளைகள் போல் கத்திக் கத்திச் சாகவேண்டியதுதான் தமிழர்களின் நிலையோ என்ற பேரச்சமே சூழ்ந்துள்ளது.

‘மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்’ என்று கவலைப்பட்டான் மகாகவி பாரதி. தமிழ் அழிந்து பிறமொழி நுழைந்துவிடும் என்ற பொருளில் பாரதியார் இந்தப் பாடலைப் பாடவில்லை.  

தமிழ் இனி மெல்ல சாகும், மேற்குமொழிகள் ஓங்கி நிற்கும் என்று பேதை ஒருவன் உரைக்கின்றான். அப்படியயாரு பழி எமக்கு ஏற்படலாமா தமிழா? எழுந்திரு.. எட்டுதிக்கும் ஓடு! உலகில் கிடைக்கும் அறிவுச்செல்வங்கள் அனைத்தையும் கொண்டுவந்து தமிழுக்கு உரமேற்று என்று மிக உரத்தத் தொனியில் மொழியைக் காக்க தமிழருக்கெல்லாம் தன்னம்பிக்கையையே அந்தப் பாடலின் ஊடாக ஊட்டி நின்றார் பாரதி.

மொழி அழிவு மட்டுமல்ல,ஓர் இனத்தின் அழிவும் அரங்கேறிக் கொண்டிருக்கும் தேசத்தில் அந்த இனத்தையும் மொழியையும் பேணிக்காக்க நம்பிக்கை ஊட்டக்கூடிய பாடல்கள் இப்போது கேட்கவில்லை. இந்த அழிவில் இருந்து மீட்டெடுக்கும் மீட்பர்கள் யாரும் வருவார்களோ என்றும் தெரியவில்லை.

ஆனால் ஒற்றைக் கைத் துப்பாக்கியை நம்பித்தான் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கி, உலகமே வியந்த தமிழர்களின் பாதுகாப்பு அரணாக தமிழீழத் தேசியத் தலைவர் எழுந்து நின்றவர். தமிழர்களிடம் மறைந்திருந்த பலத்தை அவர்களுக்கே புரியவைத்து இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியவர்.

இப்போதும் தமிழர்கள்  தங்களிடம் உள்ள பலம் என்னவென்று தெரியாத நிலைக்குள் மீண்டும் தள்ளப்பட்டுள்ளனர். அந்தப் பலத்தைத் தமிழர்கள் புரிந்துகொண்டால் மட்டுமே தமிழினம் வாழும். இல்லையேல், பலம் இழந்த இனம், பிணமாகப் போகும் நிலைதான் ஏற்படும். 

ஆசிரிய தலையங்கம்
நன்றி: ஈழமுரசு