பனை ஐஸ்கிரீம் அறிமுகம்!

செவ்வாய் பெப்ரவரி 25, 2020

பனைத் தொழில் துறை உற்பத்தியை ஊக்குவிப்பதையும் பிரபல்யப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு பனை அபிவிருத்தி சபையின் அனுசரணையுடன் பனை ஐஸ்கிரீம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக பனை அபிவிருத்தி சபை தலைவர் கிரிஷாந்த பத்திராஜ தெரிவித்துள்ளார்.

இதேவேளை பனை நார்கள் நீண்ட காலமாக இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், இரண்டு தசாப்தங்களாக மூடப்பட்டிருந்த மன்னார் செல்வாரி உற்பத்தி தொழிற்சாலையில் பனை நார் உற்பத்தி நடவடிக்கைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் எதிர்வரும் சில மாதங்களில் இலங்கைக்கு தேவையான பனை நார்கள் உள்ளுரிலேயே உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

பனையுடன் தொடர்புபட்ட அனைத்து உற்பத்திகளையும் சதொச ஊடாக விற்பனை செய்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் பனையுடன் தொடர்புபட்ட உற்பத்திகளுக்கு உரிய பெறுமதியை பெற்றுக்கொடுக்காததன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பனை தொழில் துறையில் ஈடுபட்டிருந்தோர் பெரும் சிரமங்களுக்கு உள்ளானார்கள் என்றும் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.