பஞ்சாப்- டெல்லி எல்லைகள் மூடல்! வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு-

புதன் சனவரி 27, 2021

புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் குடியரசு நாளில் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

மேலும் போராட்டத்தில் உழவு இயந்திர பேரணியும் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில்,  எதிர்பாராதவிதமாக நேற்றைய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

விவசாயிகள் காவல்துறையின் கட்டுப்பாட்டையும் மீறி செங்கோட்டையை அடைந்தனர். செய்வதறியாமல் திணறிய காவல்துறை விவசாயிகளை கட்டுபடுத்த கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைக்கச் செய்தனர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது.

பல அடுக்கு கட்டுப்பாட்டையும் மீறி செங்கோட்டைக்கு நுழைந்த விவசாயிகள், தங்களுடைய விவசாய கொடியை செங்கோட்டையில் ஏற்றினார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் இந்த போராட்டத்தில் விவசாயிகள் ஒருவர் உயிரிழந்த சம்பவம் போராடும் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய உழவு இயந்திர பேரணியின்போது நிகழ்ந்த வன்முறையில் காவல்துறையினர் 86 பேர் காயமடைந்துள்ளனர்.

வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று வன்முறை மூண்டதால் டெல்லி செங்கோட்டை, ஜாமா மசூதி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

செங்கோட்டையைச் சுற்றியுள்ள சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய படையினர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் அரியானா எல்லையில் சிங்கு, திக்ரி ஆகிய இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாபில் இருந்து டெல்லி வழியாக உத்தரப்பிரதேசத்துக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இந்த வன்முறையின் எதிரொலியாக நேற்றைய தினத்தில் இருந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.