பணம் பாதாளம்வரை பாய்கிறது இனி அழிவைத் தவிர வேறு ஏதுமில்லை!

சனி அக்டோபர் 12, 2019

நிதி நீதியாக மாறலாம்.ஆனால் நீதி நிதியாக மாறக்கூடாது இதுதான் தத்துவம்.

எனினும் எங்கள் மண்ணில் இத்தத்துவம் நேர்மாறாகிவிட்டது. எங்கும் பணம், எதற்கும் பணம் என்றானபோது நேர்மை, உண்மை மனச்சாட்சி என்பன அறவே இல்லாமல் ஆகி விடுகிறது.

மனுநீதிச்சோழ மன்னன் பசுபட்ட துன்பத்தைத் தானும் அனுபவிக்க தலைப்பட்டான்.

வீதிவிடங்கன் மனுநீதிச் சோழனின் இளவரசு.பாலகன் தேர் ஓடும் பயிற்சியில் ஈடுபட்ட வேளை அவ்வீதியால் துள்ளிவந்த ஆன்கன்று தேர்க்கால் இடைப் புகுந்து நசியுண்டு இறந்து போகிறது.

தன்பிள்ளையை இழந்த தாய்ப்பசு பரிதவிக்கிறது.
தனக்கு ஏற்பட்ட அவலத்தை மன்னர் பெருமானுக்கு எடுத்துரைக்க அரண்மனை வாயிலுக்கு ஓடிச் செல்கிறது.

பசுவின் கன்னங்கள் கண்ணீரால் கோடிட்டுள்ளன. மனுநீதி மன்னனின் அரண்மனை வாயிலில் கட்டப்பட்டிருக்கும் ஆராய்ச்சி மணியை பசு தன் கொம்பினால் சுற்றி இழுத்து அடிக்கிறது.

மணியோசை கேட்ட மன்னன் மனுநீதி, அந்தோ ஏற்பட்ட அவலம்  யாதோ என்று பதறுகிறான். நடந்த செய்தியை மந்திரி மன்னனுக்கு எடுத்துரைக்க,

தன் பிள்ளையை இழந்து பசு படுகின்ற அதே துன்பத்தை யானும் அனுபவித்தாலன்றி அந்தப் பசுவுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய முடியாதென மனுநீதிச்சோழன் முடி வெடுக்கிறான்.

மந்திரிமார், படைத்தரப்பு, குடிமக்கள் என எல்லோரும் பார்த்திருக்க தன் மகன் வீதிவிடங்கனை வீதியில் கிடத்திவிட்டு தோரோட்டி வருகிறான் மனுநீதிச்சோழ மன்னன்.

இதுகண்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் திணுக்குற்றதாக சேக்கிழார் செப்புவார். பசுவின் துன்பத்தை புரிதல் வேண்டுமாயின் அதற்கு ஏற்பட்ட இழப்பு எனக்கும் ஏற்பட வேண்டுமென நினைத்து தனக்குத்தானே தண்டனை வழங்கிய மனுநீதிச்சோழ மன்னனின் கதை இன்று தமிழ்ப் பாடத்தில் ஏதரச் சித்தி பெறுவதற்காயிற்று.

மாறாக அந்த வரலாறு எடுத்துரைக்கும் நீதி தவறாத வாழ்வு என்ற தத்துவம் அடிபட்டுப் போய்விட்டது.

இப்போது எங்கும் பணம். எதற்கும் பணம். பணம் இருந்தால் எதுவும் செய்யலாம் என்ற நிலை வந்துவிட்டது.

இந்தநிலைமை நீதியை, நேர்மையை நடுவு நிலைமையை மென்று விழுங்கி எங்கும் ஊழல், எங்கும் மோசடி, எங்கும் பணத்துக்கான பேரம் பேசல் என்றாகிவிட்டது.

இந்நிலைமை உலகை அழிக்கவல்லது.அழிவுக்கான செயல்களே எங்கும் நடக்கின்றன.

அன்று மனுநீதிச்சோழ மன்னன் பசுவுக்கு நீதி வழங்கினான். ஆனால் இன்று பசுவுக்கு ஏற்பட்ட இழப்பை தமக்கான அரசியல் பிழைப்பாக மாற்றி பசுவை அழவைத்து அதில் ஆதாயம் தேடுகின்ற ஈனர்கள் வாழ்கின்ற இடமாக நம் தேசம் ஆயிற்று.

பகையில் பணம் என்றால், ஒற்றுமையிலும் பணம்தான் பாய்கிறது எனும்போது யாம் என்ன செய்ய முடியும்.

நன்றி-வலம்புரி