பொங்கல் வாழ்த்து - வைகோ 

செவ்வாய் சனவரி 14, 2020

தன்னை வருத்தி, வியர்வை சிந்தி, உழுது பயிரிட்டு உழவர்கள் விளைவித்துத் தருகின்ற தானியமணிகள்தான், உலகை வாழ்விக்கின்றன. அதனால்தான், வள்ளுவப் பெருந்தகை, சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; உழன்றும் உழவே தலை என்றார்.

அத்தகைய வேளாண் பெருங்குடி மக்கள், தாங்கள் உயிராகப் போற்றும், நிலத்திற்கும், கால்நடைச் செல்வங்களுக்கும், நன்றி பாராட்டுகின்ற வகையில், தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றார்கள். அவர்கள் மட்டும் அல்ல, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, சாதி, மத எல்லைகள் அனைத்தையும் கடந்து, தமிழர்கள் அனைவரும் கொண்டாடுகின்றார்கள். அரிசியும், சர்க்கரையும் நெய்யும் கலந்து, புதுப்பானையில் இட்டுப் பொங்கி வரும் வேளையில், பொங்கலோ பொங்கல் என்று குலவை இட்டுக் குதூகலித்து, தன் இல்லத்தாருடன் பகிர்ந்து உண்கின்றார்கள்.

கடந்த ஆண்டு தமிழகத்தில் சில பகுதிகளில் பெருமழையும், சில பகுதிகளில் வறட்சியுமாகக் கழிந்தது. கையில் இருக்கின்ற பணத்தை முதலீடு செய்து, கடன் வாங்கிய விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. பல இடங்களில் காப்பு ஈட்டுத் தொகைக்குப் பிரிமியம் கட்டியும், ஈட்டுத்தொகை வழங்கப்படவில்லை. மதுவின் பிடியிலும், இலவசங்களின் போதையிலும், தமிழகத்தின் இளைய தலைமுறை பாழாகி வருகின்றது.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள், உற்பத்திச் செலவில் 50 விழுக்காடு லாபமாகத் தர வேண்டும் என்ற அருமையான திட்டத்தை முன்வைத்தார். அதை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றி, நொறுங்கிக் கிடக்கும் விவசாயிகளின் வேதனையைத் தீர்க்க முன்வர வேண்டும். புதுவாழ்வு தர வேண்டும். 

எவ்வளவு மனச்சுமைகள் இருந்தாலும், அவற்றை எல்லாம் மறந்துவிட்டு, நம்பிக்கையோடு தைப்பொங்கலைக் கொண்டாடி வருகின்ற தமிழக மக்களுக்கு, மகிழ்ச்சியூட்டும் காலத்தை உருவாக்க, அனைவரும் உறுதி ஏற்போம்.

தமிழக மக்களுக்குத் தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.