போரும் ஊடகமும் 06 - மகா.தமிழ்ப் பிரபாகரன்

சனி ஏப்ரல் 23, 2016

“தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசாங்கத்தினுடைய இனப்படுகொலை தொடர்பாக ஏன் உலக நிறுவனங்கள் ஐ.நா.உட்பட்டவை சிறீலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்ற ஒரு கேள்வி தமிழ் மக்களால் எழுப்பப்பட கூடியதாக இருக்கின்றது. இங்கு இது பற்றி விரிவாக பார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது. குறிப்பாக சிறீலங்கா அரசாங்கம் வன்னிப் பகுதியிலே நாள்தோறும் எங்கள் மக்களை படுகொலை செய்து கொண்டிருக்கிறது. சிறீலங்கா அரசாங்கமே பிரகடனப்படுத்திய பாதுகாப்பு வலயம் என்று சொல்லப்படுகின்ற பகுதிகளில் இருக்கின்ற மக்கள் நாள்தோறும் சிறீலங்கா அரசப்படையினரால் படுகொலை செய்யப்பட்டு கொண்டு இருக்கின்றனர். கொல்லப்படுகின்ற மக்களின் ஐம்பதிற்கும்  அதிகமாக இருப்பது அன்றாட நிகழ்வாகி விட்டது. குறிப்பாக சிறீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு வலயம் என்று சொல்லப்படுகின்ற எல்லைப் பகுதிக்குள் புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவான்பொக்கனை, பச்சை புல்வெளி, வலைஞர் மடம், முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய கிராமங்கள் இருக்கின்றன. இவற்றிலே மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். இந்த மக்கள் தரப்பால் கொட்டிலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தரப்பால் கொட்டில்களிலே வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு சிறீலங்கா அரசாங்கம் நாள்தோறும் படுகொலையை பரிசாக கொடுக்கிறது.   நாள்தோறும் சிறார்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஐம்பதிற்கும் அதிகமானவர்கள் இப்பொழுது படுகொலை செய்யப்படுவது அன்றாட நிகழ்வாகி விட்டது. இந்த சூழலிலே , படுகொலைகள் தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இவ்வாறு ஊடகங்கள் தகவல் வெளியிடுகின்ற போது சிறீலங்கா அரசாங்கம் இவ்வாறான கொலைகளை நாங்கள் நடத்தவில்லை, இவ்வாறு நாங்கள் தாக்குதல்களை நடத்தவில்லை, பாதுகாப்பு வலயம் மீது எந்த ஒரு கனரக தாக்குதலையும் நடத்தவில்லை, தாங்கள் கனரக தாக்குதல்களை இப்போது நடத்துவதே இல்லை என்று கூறிக் கொள்கின்றது.

சிறீலங்கா அரசத் தரப்பு இந்த செய்திகளுக்கு தமிழ் மக்கள் கொல்லப்படுகின்ற செய்திகளுக்கு மறுப்புகளை தான் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் இந்த தாக்குதல்களில் படுகாயம் அடைந்து சிறீலங்கா படைப்பல பகுதிகளுக்குள் இருக்கின்ற மருத்துவமனைகளுக்கு சிகிச்சைகளுக்கு செல்கின்ற போது அவர்கள் சிறீலங்கா படைத்தாக்குதல்களில் தங்களுடைய உறவுகள் கொல்லப்பட்டதையும் தாங்கள தாக்குதலில் தான் காயம் அடைந்தையும் கூறுகின்ற போதிலும்கூட சிறீலங்கா அரசாங்கம் உரைக்கின்ற பொய் , இதுவரை உண்மையாக சிறீலங்கா அரசாங்கத்தால் விடப்படவில்லை. சிறீலங்கா அரசாங்கத்தால் அதுபொய்யாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு எவரையும் சிறீலங்கா அரசப் படையினர் கொல்லவில்லை என்பது அச்செய்தி. தமிழ் மக்களை சிறீலங்கா அரசப்படைகள் கொல்வதில்லை, பாதுகாப்பு வலயம் என்று சொல்லப்படுகின்ற பகுதி மீது சிறீலங்கா அரசப்படைகள் தாக்குதல்களை நடத்துவதே இல்லை. தாக்குதல்கள் நடத்தாத நிலைமையிலே சிறீலங்கா அரசப் படையினரால் மக்கள் எவரும் கொல்லப்படுவதில்லை என்பது தான் அதனுடைய நிறுவலாக வந்து சேர்கின்றது. இவ்வாறு சிறீலங்கா அரசாங்கத்தால் எங்களுடைய மக்கள் நாள்தோறூம் படுகொலை செய்யப்பட்டு கொண்டிருக்க சிறீலங்கா அரசாங்கம் அதை மறுத்து தாங்கள் அவ்வாறு செய்யவில்லை எனக் கூறிக்கொண்டிருக்க உண்மையில் இதில் கொல்லப்படுகின்ற மக்கள் எவ்வாறு கொல்லப்படுகின்றனர் என்பது தொடர்பான ஆய்வுகளை ஏதாவது ஒரு வெளிநாட்டு நிறுவனம் செய்வதற்கு முன்வருகிறது என்றதொரு கேள்வி முன்வருகின்றது. சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவரும் சூழலிலே பன்னாட்டு நிறுவனங்களையும் வன்னிப்பகுதிக்குள் வர அனுமதிக்கவில்லை. சிறீலங்கா அரசாங்கம் கூறுவது உண்மையாக இருந்தால் வன்னி பகுதிக்கு பன்னாட்டு நிறுவனங்களையோ அல்லது மனித உரிமை கண்காணிப்பாளர்களையோ அனுமதிக்க முடியும். ஆனால் சிறீலங்கா அரசாங்கம் மனித உரிமை கண்காணிப்பாளர்களை வன்னிப் பகுதிக்கு அனுமதிக்கவில்லை. சிறீலங்கா அரசாங்கம் மனித உரிமை கண்காணிப்பாளர்களை அனுமதிக்க முடியாது என்று இறுக்கமாக சொல்லி இருக்கின்றது. சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களை கொல்லவில்லை என்று சொன்னால் நீங்கள் மனித உரிமை கண்காணிப்பாளர்களை வன்னிக்கு அனுமதிக்கலாமே சிறீலங்காவில் அனுமதிக்கலாமே என்றதொரு கேள்வியை மனித உரிமை கண்காணிப்பகமோ ஐ.நா.வுடைய மனித உரிமை நிறுவனமோ எழுப்பலாம். ஆனால் அவ்வாறு எதையும் எழுப்பவில்லை. வன்னிப்பகுதியிலே எந்த மக்களையும் நாங்கள் கொல்லவில்லை, பாதுகாப்பு வலயம் மீது தாங்கள் நடத்துவதே இல்லை என்று சிறீலங்கா அரசு சொல்வது உண்மையானால், அவற்றை  நிரூபிப்பதற்காக அந்நிறுவனங்களை வன்னிக்கு சிறீலங்கா அரசாங்கம் விடலாமே ? ஆனால் அவ்வாறு விடுவதில்லை. ஆக சிறீலங்கா அரசாங்கத்தினுடைய பதில்களிலேயே சிறீலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தக்கொடுக்கக் கூடிய கேள்விகளை கேட்பதற்குரிய தகமை உலக நிறுவனங்களுக்கும் ஐ.நா.வுக்கும் இருக்கின்றது. ஆனால் அவ்வாறான கேள்விகள் எதுவும் உலக நிறுவனங்களால்  சிறீலங்கா அரசாங்கத்துக்கு எதிராக எழுப்பப்படுவதில்லை. சிறீலங்கா அரசாங்கமோ தமிழ் மக்களுக்கு எதிரான இந்த இனயழிப்பு போரை இவ்வாறு பொய்யைச் சொல்லிக் கொண்டே நடத்திக் கொண்டிருக்கின்றது. அண்மை நாட்களை விட மிகச்செறிவான எறிகணைத் தாக்குதல்கள், வான்குண்டு தாக்குதல்கள் இந்த மண்ணிலே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. மக்கள் படுகொலை செய்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள். சிறீலங்கா அரசாங்கம் தங்களுடைய சொந்த மண்ணிலே வாழ விரும்புகின்ற மக்களை பலி எடுத்துக் கொண்டு மனிதாபிமான போர் நிறுத்தம் வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபையினுடைய முடிவினை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறது. வேண்டுமென்றால் வன்னி மக்களை சிறீலங்கா படை வலையமைப்பு பகுதிக்குள் வர அனுமதிப்பதானால் தற்காலிக போர் நிறுத்தம் அதாவது மனிதாபிமான போர் நிறுத்தத்துக்கு தயார் என அரசாங்கம் சொல்லிக் கொள்கிறது. இவை தொடர்பாக எவரும் கேள்வி எழுப்பவில்லை.

வன்னி மக்கள் சிறீலங்கா படை பகுதிக்குள் சென்ற நிலையிலே அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதும் எல்லாராலும் அறிப்பட்டது ஒன்று, உலக நிறுவனங்களுக்கும் அதொரு வதை முகாம் என்பது தெரியும், அவர்களுடைய அறிக்கையிலேயே அது வெளிவந்திருக்கிறது. ஆக மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் வாழ விருப்பம் கொண்டிருக்கின்ற சூழலிலே அவர்களை கொண்டு சென்று சிறையில் அடைத்து அவர்களை வதைத்தல், காணாமல் போகச் செய்தல் என்பது போன்ற நடவடிக்கைகளுக்குள் தான் சிறீலங்கா அரசாங்கம் உட்படுத்தப் போகின்றது. ஆக சிறீலங்கா அரசாங்கத்தின் வதை முகாம்களுக்கு செல்வதற்கு மக்கள் ஆயத்தமாக இல்லை, ஆனால் வதை முகாம்களுக்கு மக்கள் செல்ல வேண்டும் என்பது தான் சிறீலங்கா அரசாங்கத்தினுடைய விருப்பமாக இருக்கின்றது. இது தொடர்பாக எல்லாம் உலகத்தால் கேள்விகளை எழுப்ப முடியும், ஆனாலும் ஏன் கேள்விகளை எழுப்பவில்லை என்பது தான் தமிழ் மக்களிடம் எழுந்திருக்கிற பெரும் கேள்வி ?”, 2009 போரின் இறுதிக்கட்டங்களை எடுத்து சொல்லும் இக்குரல் புலிகளின் குரல் வானொலியின் செய்தியாளர் தவபாலனுக்கு உரியது. தவபாலனின் குரல்  இறைவன் என்ற பெயரிலும் ஒலிப்பரப்பானது.

நவம்பர் 27, 2007…

தமிழீழ மாவீரர் நாளன்று கிளிநொச்சியில் அமைந்திருந்த புலிகளின் குரல் வானொலி மையத்தின் மீது இலங்கை விமானப்படையால் தாக்குதல் நடத்தப்பட்டது. ஊடக அடக்குமுறையின் அங்கமாக நிகழ்ந்த விமானப்படையின் கிபீர் தாக்குதலில் அறிவிப்பாளர் இசைவிழி செம்பியன், பொறியியல் பிரிவைச் சேர்ந்த தர்மலிங்கம், சுரேஸ்லிம்பியோன் ஆகியோர் படுகொலைசெய்யப்பட்டனர். சாந்தபோதினி, அன்பரசி ராஜ்குமார் உள்ளிட்ட நான்கு வானொலி நிலையப் பணியாளர்கள் படுகாயமடைந்தனர். தவபாலனும் புலிகளின் குரல் நிறுவன பொறுப்பாளர் தமிழன்பனும்(ஜவான்) பதுங்கு குழியிலிருந்து உயிர் தப்பினர். இந்த தாக்குதலில் தவபாலன் தப்பி விட்டார் என்ற கவலையும் இலங்கை அரசிற்கு இருந்தது.

2009 போரின் இறுதிக்கட்டமான முள்ளிவாய்க்கால் வரை ஒரு செய்தியாளனாகவே பயணப்பட்ட தவபாலனின் ஊடக வாழ்க்கை 1990 களில் தொடங்கியது. அவரின் ஊடகப் பாதையினை தமிழ்த் தேசிய போராட்டத்தோடு அமைவதாக உருவாக்கிக் கொண்டார். அவரின் செய்தி ஒலி வீச்சுகள் இலங்கை படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான போர்களச் செய்திகளையும் போரினால் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வந்த பிரச்னைகளையுமே பெரிதும் பேசின.  

அன்றைய காலக்கடத்தில் சர்வதேச ஊடகங்கள் பல இருந்தும் தேசத்தின் கள நிலைமைகளை விளக்குக்கின்ற தவபாலனின் செய்தி வீச்சினை ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் அனைத்து அடக்குமுறைக்களுக்கு மத்தியிலும் அந்நேரத்திற்கு கேட்டுள்ளனர். அந்த நேரத்தில் மின்சாரம் இல்லை, மின்கலன் (பேட்டரி) தட்டுப்பாடு, சீரான அலைவரிசை கிடையாது. ஆனால் இதற்கிடையிலும் சைக்கிள் டைனமோயிலிருந்து மின்சாரம் எடுத்தும் மரங்கள் மீது ஏன்டனாவை உயர்த்தியும் தவபாலனின் செய்தி வீச்சினை புலிகளின் குரல் வழியே கேட்டுள்ளனர்.

“சிறீலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளுடைய உடைமைகளை கைப்பற்றுகின்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான செயல்பாடுகளை கொண்டிருக்கிறது என்ற செய்தி வந்திருக்கின்றது. பன்னாட்டு நாணிய நிதியத்திடம் (IMF) சிறீலங்கா அரசாங்கம் கடன் கோருவதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்திருகின்றார். இடம்பெயர்ந்தவர்களுக்கான மருத்துவமனை ஒன்றை புல்மோட்டையிலே அமைக்க இந்திய மருத்துவர்கள் ஈடுப்பட்டு இருக்கின்றனர். ஐம்பது படுக்கைகளை கொண்ட மருத்துவமனையை அமைப்பதற்கு இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு இருக்கின்றது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. உண்மையில் அது ஓர் இன சுத்திகரிப்பு முகாம் தானே, அதற்கு இந்தியாவும் உதவி வழங்குகிறது போல…” 2009 காலக்கட்டத்தில் ஒலிப்பரப்பான தவபாலனின் செய்தி வீச்சின் துளிகள் இவை.

தன்னுடைய செய்தி வீச்சுகளில் இலங்கை அரசின் முகாம்களின் நிலைப்பற்றி எப்படி வதை முகாம்கள் என எச்சரித்தாரோ, அவ்வாறே போரின் முடிவுக்கு பின் லட்சக்கணக்கிலான தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்ட மெனிக் பார்ம் முகாம்கள் இருந்தன. 2009 போரின் இறுதிக்கட்டம் வரை இலங்கை அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பையும் இன அழிப்பையும் தெரியப்படுத்திக்கொண்டிருந்தவராக இருந்த தவபாலனின் இருப்பைப் பற்றி இதுவரை எந்தவித தகவலும் இல்லை. போரின் இறுதியில் அவர் ஏதோ ஒரு வகையில் உயிரிழந்திருக்கக்கூடும் என்றே நம்பப்படுகிறது.  

திரும்பிப் பார்ப்போம்…