போரும் ஊடகமும் 07 : மகா.தமிழ்ப் பிரபாகரன்

சனி ஏப்ரல் 30, 2016

நீண்ட காலங்களுக்கு பிறகு , ஒரு பேட்டியின் போதான சந்திப்பில் 'எனது தைரியத்தையும் 1983 கொழும்பில் நிகழ்ந்த கலவரத்தை பற்றி நான் செய்தி சேகரித்தன் முறையையும்' கண்டு வியப்பதாக சொன்னார் பிரபாகரன். அதோடு, 'நாங்கள் கொரில்லா போராளிகள், நாங்கள் ஆபத்தையே பாதையாக தேர்ந்தெடுத்துள்ளதால் கடுமையா ன சூழல்கள் எங்களுக்கு பழகிப்போனவை. ஆனால் ஒரு பத்திரிகையாளராக நீங்கள் உயிரை பணயம் வைக்க வேண்டும் என்பதில்லை, இருப்பினும் இந்த மோதல்மிக்க பிரதேசத்திலிருந்து உண்மையை கொண்டு வரும் விதமாக செயல்பட்டிருக்கிறீர்கள். உங்கள் செய்திகளே தமிழர்களின் பிரச்னையை சர்வதேசமயப்படுத்தியிருக்கிறது, அதற்காக என்றும் தமிழ் மக்கள் உங்களுக்கு நன்றிகுரியவர்களாக இருப்பார்கள்' என்றார் பிரபாகரன்.

அவர் பாராட்டில் நான் நெகிழ்ந்து போய்விட்டேன் என்றே சொல்லவேண்டும். 1983 கலவரத்தின் சில மாதங்களுக்கு பிறகு, பிரபாகரன் அவருடைய முதல் பேட்டியை எனக்களித்தார். அதன் பிறகு  தமிழர் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு குறிப்பிடத்தக்க நிகழ்வின் போதும் அவர் எனக்கு பேட்டியளித்தார். அவரை நான் 'இரக்கமற்றவர், கொடுங்கோலர், அகந்தை கொண்டவர்' என்றெல்லாம் கூட குறிப்பிட்டிக்கிறேன் என 'ஐலான்ட் ஆப் பிலட் என்ற நூலின் 'தம்பியிலிருந்து அன்னை' பாகத்தில் தெரிவித்துள்ளார் அனிதா பிரதாப்.

அனிதா பிரதாப்பின் கேள்விகளுக்கு பிரபாகரன் சொல்லியிருக்கும் பதில்கள் அக்காலக்கட்டத்தில் மிகவும் முக்கியமானவை.

மார்ச் 11-17,1984 சண்டே இதழில் வெளியானது பிரபாகரனின் முதல் பேட்டி.

அனிதா: வழக்கமான அரசியல் அமைப்பில் இருந்து விலகவும், ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்கவும் உங்களைத் தூண்டியது எது? அத்தகைய ஒரு விடுதலை இயக்கம் சட்ட விரோதமாக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியும்தானே?

பிரபாகரன்: இலங்கையின் சனநாயகப் பாராளுமன்ற அமைப்பு அல்லது நீங்கள் சொல்வதைப் போல இலங்கையின் வழக்கில் உள்ள அரசியல் அமைப்பு எப்போதுமே பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தையே சிறுபான்மையினர் மீது திணித்து வந்திருக்கிறது. இந்த அரசு அமைப்பானது எங்கள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிவிட்டது என்பதுடன், எமது நிலையை மேலும் மோசமாக்கிவிட்டது. காலம் காலமாக அரசின் ஒடுக்குமுறை ஆட்சியானது எம் மக்களின் வாழ்வு நிலையைச் சகிக்க முடியாததாகவும்ம துன்பகரமானதாகவும் மாற்றிவிட்டது. எம் மக்கள் நடத்திய சாத்வீக சனநாயகப் போராட்டங்கள் இராணுவத்தால் நசுக்கப்பட்டன. எமது நியாயமான கோரிக்கைகள் முற்று முழுவதாகப் புறக்கணிக்கப்பட்டதுடன் இந்த அடக்குமுறையானது தமிழ் மக்களின் உயிர் வாழ்வுக்கே ஆபத்தாக அமைந்தது. இத்தகைய சூழ்நிலைகளே ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்க என்னத் தூண்டின. தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மட்டுமல்ல, சிங்கள அடக்குமுறையிலிருந்து இறுதியாகத் தங்களை விடுவித்துக் கொள்ளவும் எம் மக்களுக்கு ஆயுதப் போராட்டமே நடைமுறைச் சாத்தியமான ஒரே வழியென்று நான் உணர்ந்தேன். எங்கள் இயக்கம் தடை செய்யப்படும் என்பது எனக்கு முன்கூட்டியே தெரியும். அதனால்தான் எங்கள் இயக்கத்தை அதன் ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு தலைமறைவு இயக்கமாக உருவாக்கினோம்.

அனிதா: இலங்கைத் தமிழர்களுக்கு ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்று நீங்கள் தீர்க்கமான முடிவுக்கு வர நிர்ப்பந்தித்த உங்களின் தனிப்பட்ட அனுபவங்களைச் சற்றுக் கூறுவீர்களா? கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இலங்கை அரசு காட்டிய பாரபட்சமான கொள்கையால் நீங்களோ உங்கள் குடும்பதவரொஒ அல்லது உங்களது நண்பர்களோ நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனரா?

பிரபாகரன்: நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோதது1958ஆம் ஆண்டின் இனக் கலவரங்களில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவங்கள் என் மனத்தில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியர்களால் எம் மக்கள், ஈவிரக்கமில்லாது குரூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். எங்கள் குடும்பத்திற்கு தெரிந்த ஒரு விதவைத் தாயை நான் ஒருமுறை சந்தித்தபோது அவர் இந்த இன வெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை என்னிடம் சொன்னார். இனக் கலவரத்தின் போது சிங்களக் காடையர்கள் கொழும்புவிலிருந்த அவர் வீட்டைத் தாக்கினார்கள். அவரது வீட்டுக்குத் தீ வைத்து, அவருடைய கணவரையும் குரூரமாகக் கொலை செய்தனர். அவரும் அவரது பிள்ளைகளும் பலத்த எரிகாயங்களுடன் தப்பினார்கள். அவரது உடலில் காணப்பட்ட எரிகாயத் தழும்புகளைப் பார்த்தபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சிறு குழந்தைகளைக் கொதிக்கும் தாருக்குள் உயிருடன் வீசிக்கொன்ற கோரச்சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கேட்கும்போது என் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும், அன்பும் ஏற்பட்டன. இந்த இனவெறி அமைப்பின் பிட்டிக்குள்ளிருந்து எம் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற பெரும் உந்துதல் என்னிடம் தோன்றியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று நான் ஆழமாக உணர்ந்தேன்.

அனிதா: உங்களைப் புலிகள் என்று ஏன் அழைத்துக் கொள்கிறீர்கள் ?

பிரபாகரன்: தமிழர்களின் அரசியல் வரலாற்றில் புலிச்சின்னமானது ஆழ்ந்து வேரோடி இருப்பதால் தான் எமது இயக்கத்திற்கு 'விடுதலைப் புலிகள்' என்று பெயரிட்டேன். புலிச்சின்னமானது தமிழ்த் தேசியத்தின் புத்தெழுச்சியை உருவகப்படுத்துகிறது. அத்துடன் கொரில்லா யுத்த முறையைய்யும் புலிச்சின்னம் குறித்து நிற்கிறது.

அனிதா: விடுதலைப் போராட்டத்தில் உங்களது நீண்டகால அனுபவமானது, வாழ்க்கை பற்றிய உங்களது நோக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்த அனுபவங்களின் மூலம் உங்கள் பார்வையில் ஏற்பட்ட தாக்கங்கள் பற்றியும், உங்கள் இலட்சியத்தில் எழுந்த உறுதிப்பாடுகள் பற்றியும் கூறுவீர்களா? அத்துடன் உங்கள் அனுபவங்கள் நீங்கள் ஏற்கனவே வரித்துக் கொண்ட சில கொள்கைகள், கோட்பாடுகள் நடைமுறையில் எத்துணை பொருத்துமற்றது என்பதனை உணர்த்தும் அதேவேளையில் வேறு சில சரியானவைதாம் என்ற கருத்தினையும் ஏற்படுத்தியிருக்கலாம் அல்லவா ? அவற்றில் சிலவற்றைக் கூறுவீர்களா?

பிரபாகரன்: நாங்கள் வரித்துக்கொண்ட ஆயுதப் புரட்சிப் பாதை மிகவும் சரியானது என்பதைக் கடந்த 12 வருடகால அனுபவங்கள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் எனக்கு உணர்த்தியிருக்கின்றன. எமது ஆயுத ரீதியிலான போராட்ட வடிவத்தை 'பயங்கரவாதம்' என்று விமர்சித்த மற்ற விடுதலைக் குழுக்குள் ஒடுக்கப்பட எமது மக்களின் விடுதலைக்கான ஒரே வழி ஆயுதப் போராட்டம் தான் என்பதை இப்போது ஏற்றுக்கொண்டு விட்டன. நாங்கள் கைக்கொண்ட கொரில்லா யுத்தமுறையானது விடுதலைப் போராட்டத்தின் வலிமைமிக்க வடிவமாக அமைந்திருக்கிறது. எமது வெற்றிகரமான கொரில்லாத் தாக்குதல்கள், சிங்கள ஆயுதப் படைகளைத் தோற்கடித்து, சுதந்திரத்தை வென்றெடுக்க எம்மால் முடியுமென்ற நம்பிக்கையை எமது மக்களுக்கு ஊட்டியிருக்கின்றன.

இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.

அனிதா: இலங்கை அரசாங்கத்தால் தேடப்படுபவர்களில் முதன்மையானவராக இருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பிரபாகரன்: பிரிட்டிஷ் அரசாங்கம் யாரைப் 'பயங்கரவாதி' என்று சொல்கிறதோ, அவனே உண்மையான ஐரிஸ் தேசியப் போராளி என்று ஐரிஸ் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார். அதுபோல, இலங்கை அரசு என்னைத் தேடப்படுபவர்களில் முதன்மையானவராகக் கருதினால் அது நான் உண்மையான தமிழ்த் தேசிய போராளி என்பதையே உணர்த்துகிறது. அவ்வாறு தேடப்படும் நபராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

 

அனிதா: எதிர்காலத்தில் தமிழர்கள் மீது தாக்குதல்களை எதிர்பார்க்கிறீர்களா ? எந்தக் காரணத்தை முன்னிட்டு?

பிரபாகரன்: ஆம். நான் எதிர்பார்க்கிறேன். திருகோணமலையிலும் வவுனியாவிலும் பெரும் எண்ணிக்கையில் தமிழர்களைக் கொல்லுவதற்கான ஒரு நாசகாரத் திட்டத்தை இனவெறி பிடித்த பாசிச சக்திகள் உருவாகி வருகின்றன. தங்களுடைய உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த தேசிய இராணுவத்துடன் சுதந்திரமான தமிழீழத் தேசம்  உருவாக்கப்படும் வரை தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது.

அனிதா: கொரில்லாக்களுக்கு எதிரான போர்முறையில் சிங்கள இராணுவத்திற்கு இஸ்ரேலியர்கள் பயிற்சி தருகின்றனர் என்பது உண்மையா?

பிரபாகரன்: இதுவரை இலங்கையில் இஸ்ரேலிய இராணுவ நிபுணர்கள் இருப்பதைப் பற்றி நம்பத்தகுந்த செய்திகள் எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட செய்திகள் உண்மையாக இருந்தாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன். சிறீலங்கா அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் அதன் கூலிகளுக்குமான ஒரு தளமாக விரைவாக மாறிக் கொண்டு வருகிறது. பயிற்சி தருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் நிபுணத்துவம் எத்தகையதாக இருந்தாலும், விடுதலைப் புலிகளின் மனோ திடத்தையும், உறுதியையும் அழித்துவிட சிங்கள இராணுவத்தால் முடியாது. மகத்தான தார்மீக வலிமையும், தியாக உணர்வும், உன்னத இலட்சியப்பற்றும் எங்களுக்கு உண்டு.

அனிதா: அமெரிக்காவிலிருந்து சிறீலங்காவிற்குப் பெருமளவில் ஆயுதங்களும், உபகரணங்களும் வந்து குவிவது பற்றி உங்கள் கருத்து என்ன ?

பிரபாகரன்: இந்த ஆயுதக் குவிப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியது. சிறீலங்கா இராணுவத்திற்கு உதவிசெய்து தமிழீழ சுதந்திரப் போராட்டத்தை நசுக்குவது மட்டும் அமெரிக்கஅவின் நோக்கமல்ல என்பது உங்களுக்கத் தெரிந்ததே. திருகோணமலையில் ஒரு கடற்படைத் தளத்தை அமைத்துக் கொள்வது அமெரிக்க ஏகாதிப்பத்தியத்தின் கபட நோக்கம். இது இந்து சமுத்திரப் பகுதியை யுத்தப் பிராந்தியமாக மாற்றுவதுடன் இப்பிரதேசத்தில் யுத்த நெருக்கடியை உண்டுபண்ணும்.

அனிதா: உங்கள் கணிப்பில் தமிழீழத்தை எப்போது அடைவீர்கள்?

பிரபாகரன்: விடுதலைப் போராட்டத்திற்கு காலவரையறையோ அல்லது ஒரு பூர்வாங்கத் திட்டமோ இருக்க முடியாது. தமிழீழத்திலும் உலக அரங்கிலும் உருவாகும் நிலைமைகளைப் பொறுத்து இது அமையும்.

1985 யில் சண்டே இதழில் வெளியான பேட்டி

அனிதா: ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இதே 'சண்டே' இதழுக்கான நேர்முகத்தில் வவுனியாவிலும் திரிகோணமலையிலும் இராணுவத்தாக்குதல் வரும் என எந்த அடிப்படையில் கணித்தீர்கள்?

பிரபாகரன்: இந்தப் பகுதிகளில் கட்டாயக் குடியேற்றங்கள் விறுவிறுப்பாக நடைபெறுவதை வைத்து இராணுவத் தாக்குதல் வரும் என்று எனக்குத் தெரிந்தது. எங்கள் பகுதிகளை ஆக்கிரமிக்கவும், யாழ்ப்பாண தீபகற்பப் பகுதிகளுக்குள் எங்களைத் தள்ளவும் ஒரு திட்டமிட்ட முயற்சி நடக்கிறது. நேற்றுக்கூட (செப்.15) திருகோணமலையில் ஒரு உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தினோம். எங்கள் எல்லைகளைப் பாதுகாப்பது மிக மிக முக்கியம். அல்லது நாங்கள் விரட்டப்படுவோம். எங்களது இராணுவ முகாம்கள் இருப்பதனால் தான் ஜெயவர்த்தனேவால் எங்களை எங்கள் பிரதேசத்திலிருந்து விரட்டமுடியவில்லை. எதிர்காலத்திலும் அதுபோல் விரட்ட முடியாது.

அனிதா: ஒருவேளை, சில சூழ்நிலைகளில் உங்களுக்கும் இந்திய அரசுக்குமான உறவுகளில் சிக்கல் ஏற்பட்டு இந்தியா உங்களுக்கு உதவும் முயற்சியிலிருந்து வெளியேறும் நிலை உருவானால், உங்கள் விடுதலைப் போரைத் தனியாகவே தொடர்வீர்களா?

பிரபாகரன்: அதைத்தவிர வேறுவழி என்ன இருக்கிறது? எங்கள் இலட்சியத்தை அடையும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இந்தியாவின் ஆதரவு எங்களுக்கு ஊக்கமளிக்கும் மருந்து. எனினும், இந்தியா எங்களுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டால், எங்கள் விடுதலைப் போர் முடிந்துவிடும் என்று சொல்லமுடியாது. ஏனெனில், எங்கள் போராட்டத்தைத் தொடங்குபோது இந்தியாவின் ஆதரவையோ, அல்லது வெளியிலுள்ள வேறு ஒரு சக்தியின் ஆதரவையோ பெற்று, தொடங்கவில்லை. நாங்கள் இறுதி வரை போராடுவோம். நாம் களப்பலியானால் வேறு ஒருவர் பொறுப்பேற்பார். சுபாஷ் சந்திரபோசு கூறியதைப் போல,'எந்த ஒரு விடுதலைப் போராளியும் தான் மட்டுமே விடுதலையைப் பெற்றுத் தரமுடியும் என தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ள முடியாது'. எனது தலைமுறை விடுதலையைப் பெற்றுத் தரமுடியவில்லையெனில், அடுத்த தலைமுறை போராட்டத்தை தொடங்கும்.

பிப்ரவரி 1983, இலங்கைக்கான தனது முதல் பயணத்தை தொடர்ந்ததாக சொல்லும் அனிதா பிரதாப், அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனேவை பேட்டி கண்டதாக குறிப்பிடுகிறார். அப்போது அவரின் வயது 24.

இந்த பேட்டிக்கு சில மாதங்களுக்கு பிறகு ஜூலை கலவரம் வெடித்தது. அப்போது அனிதா, கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு வெளியான தி தெலிகிராப் பத்திரிகையின் துணைப்பதிப்பான சண்டே இதழுக்காக சென்னையில் பணியாற்றி வந்தார். இந்தியர்களும் தமிழர்களும் சிங்களர்களால் சேர்த்தே தாக்கப்பட்ட சூழல் அது.

கலவரம் வெடித்த நிலையில் அனைவரும் கொழும்பில் இருந்து தப்புவதற்கு முயற்சிக்க, ஒரு பத்திரிகையாளராக கொழும்பை நோக்கி சென்றவர் அனிதா. ஜூலை கலவரத்தை பற்றிய கட்டுரையே தனது ஊடக வாழ்க்கையை கட்டியெழுப்பியதாக நினைவுக் கூர்கிறார் அனிதா.

1983 கலவரம் பற்றி குறிப்பிடும் அனிதா,'இலங்கை அனுபவம் என்னை சிதைத்துள்ளது. என்னுடைய வாழ்வில் இது ஒரு திருப்புமுனை. என் சொந்த வாழ்க்கை-ஊடக வாழ்க்கை இரண்டையுமே 1983 கலவரத்துக்கு முன்பு-பின்பு என வகைப்படுத்தலாம். மிகவும் வசதியான மகிழ்ச்சியான குடும்பத்தில் பிறந்த எனக்கு, இலங்கை வேறு ஓர் உலகத்தை காட்டியது. அந்த உலகம் வன்முறைமிக்கதாகவும் கொடூரமானதாகவும் அநீதி மிக்கதாகவும் மிருகத்தனமாகவும் இருந்தது'.

                                                                                                                                                 - திரும்பி பார்ப்போம்... 

மகா.தமிழ்ப் பிரபாகரன்

ஊடகவியலாளர்/ஆவணப்பட இயக்குநர்

நன்றி: ஈழமுரசு