பொறுப்புக்கூறலை உறுதி செய்யுங்கள்!

செவ்வாய் நவம்பர் 19, 2019

பொறுப்புக்கூறப்படுவதை உறுதி செய்யுமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ சிறிலங்காவின்  புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அமெரிக்கா சிறிலங்கா  மக்களை அவர்களின் ஜனநாயக தேர்தலிற்காக  பாராட்டுகின்றது என தெரிவித்துள்ள மைக்பொம்பியோசிறிலங்காவின் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா ஆர்வமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு துறை சீர்திருத்தம்,பொறுப்புக்கூறப்படுதல், மனித உரிமைகளிற்கு மதிப்பளித்தல்,மீண்டும் வன்முறை நிகழாமை ஆகிய இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடுகளை மதிக்குமாறு இலங்கையின் புதிய ஜனாதிபதியை கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரமான நேர்மையான வெளிப்படையான ஜனாதிபதி தேர்தல் மூலம் சிறிலங்கா தொடர்ந்தும் தனது ஜனநாயகத்தின் வலுவை வெளிப்படுத்தியுள்ளது என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.

அமைதியான தேர்தலை ஊக்குவித்தமைக்காக தேர்தல் ஆணையாளர் சிவில்சமுகம் வேட்பாளர்களை பாராட்டுகின்றோம் என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா  அமெரிக்காவின் பெறுமதி மிக்க சகா என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ இருதரப்பு மற்றும் பிராந்திய விடயங்களிலும் சுதந்திரமான வெளிப்படையான இந்து சமுத்திரத்தை உறுதிசெய்வதிலும் சிறிலங்காவுடன் அமெரிக்கா இணைந்து செயற்படவிரும்புகின்றது என தெரிவித்துள்ளார்.