போதைவஸ்தை ஒழிப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்!

சனி பெப்ரவரி 09, 2019

தமிழ்நாட்டின் திரைப்படங்களைப்பார்க்கும் போதெல்லாம் இப்படியயல்லாம் நடக்குமா? என்ற கேள்வி எழுவதுண்டு.

தமிழ்நாட்டில் நடக்கின்ற சம்பவங்களே அங்கு திரைப்படங்களாகின்றன என்று கூறுவோரும் உளர்.
ஆம், இப்போது தமிழ்நாட்டுத் திரைப்படக் காட்சிகள் எங்கள் வாழ்வியலில் சாதார சம்பவங்களாகிவிட்டன.

திரைப்படத்தில் வருகின்ற வாள்வெட்டுக் கலாசாரம், அரசியல் சார்ந்த ஊழல்கள், காவல்துறையினரின் நேர்மையற்ற போக்குகள்,

போதைவஸ்து கடத்தல் என்பன எங்கள் மண்ணில் சாதாரணமாகிவிட்டன எனும் போது, தமிழகத்து சினிமாப்படங்கள் எங்கள் இளைஞர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் எத்துணை தூரம் தாக்கம் செலுத்தியுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

முன்னைய காலத்தில் திரையரங்குகளில் வெளியிடப்படுகின்ற திரைப்படங்களை மிகச் சொற்பமானவர்களே பார்வையிடுவர்.ஒரு திரைப்படம் நூறு நாள் நின்று பிடித்தால் அதுவே வெற்றிப் படமாக கணிக்கப்படும்.

அவ்வாறு நூறு நாட்கள் நின்று பிடிக்கின்ற திரைப்படங்கள் மிக உன்னதமான வாழ்க்கைத் தத்துவத்தைப் போதிப்பதாக இருக்கும்.

அந்தத் திரைப்படத்தில் வருகின்ற அர்த்தமுள்ள பாடல்கள் எங்கள் இளைஞர்களை வழிப்படுத்தின.

ஆக,அன்றைய திரைப்படங்கள் மனித சமூகத்தை முன்னேற்றுவதாக சீர்திருத்துவதாக இருக்க,  

இன்றைய திரைப்படங்கள் வாள், கத்தி, துப்பாக்கி சகிதமே ஆரம்பமாகிறது.இதன் விளைவாக எங்கள் இளைஞர்களும் திரைப்படங்களை நிஜமாகப் பாவனை செய்து கத்தி, வாள் சகிதம் உலா வருவதுடன் மோட்டார் சைக்கிள்களையும் வாகனங்களையும் மிக வேகமாக செலுத்தி கவிழுகின்ற அபத்தங்கள் நடக்கின்றன.

இதில் மிக மோசமான கொடுமை என்ன வெனில், போதைவஸ்து கடத்தல்களும் மதுபாவனையுமாகும்.

ஆம், இன்று எங்கள் வடபுலம் போதைவஸ்துப் பாவனைக்கும் கடத்தலுக்குமான கேந்திர நிலையமாக ஆக்கப்படுவதை அறிய முடிகின்றது.

அதிலும் குறிப்பாக போதைவஸ்துப் பாவனையை எங்கள் மாணவச் செல்வங்களிடம் பரப்புரை செய்வதன் மூலமாக வடபுலத்தை போதைவஸ்துக் கடத்தலுக்குரிய கேந்திர நிலையமாக மாற்றப்படுகின்ற சதித்திட்டங்கள் நடப்பதையும் உணர முடிகின்றது.

இது எங்கள் இனத்தை எங்கள் சந்ததியை வேரறுக்கின்ற கொடும் செயலாகும்.

எனவே இப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் முன்னெடுத்துள்ள போதை வஸ்துவுக்கு எதிரான செயற்றிட்டத்துக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி போதை வஸ்தை பிடுங்கி எடுக்க வேண்டும்.

-வலம்புரி-