போதுமான பொருளாதார கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை நிதியுதவியில்லை !

வெள்ளி ஜூலை 29, 2022

போதுமான பொருளாதார கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க தயாரில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது.

அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள உலக வங்கி இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் மீதான அதன் தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மருந்துகள் சமையல்எரிவாயு உரம் பாடசாலை மாணவர்களிற்கான உணவுகள் போன்றவற்றில் காணப்படும் பற்றாக்குறை மற்றும் வறிய மற்றும் நலிந்த நிலையில் உள்ள குடும்பங்களிற்கான நிதியுதவி போன்றவற்றிற்காக தனது போர்ட்போலியோவின் கீழ் காணப்படும் கடன்களின் கீழ் வளங்களை மறுபரிசீலனை செய்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இன்றுவரை இந்த நிதியில் 160 மில்லியன் அமெரிக்க டொலரை அவசரதேவைகளை பூர்த்தி செய்வதற்காக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள உலக வங்கி ஏனைய அடிப்படை சேவைகள் மருந்து மருத்துவ விநியோகம் பாடசாலை உணவுகள் போன்றவற்றிற்காகவும் இந்த நிதியை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த வழமைகள் ஏழ்மையான நலிந்த நிலையில் உள்ள மக்களை சென்றடைவதை உறுதி செய்வதற்காக நம்பிக்கைக்குரிய கட்டுப்பாடுகள் மற்றும் மேற்பார்வைகளை நடைமுறைப்படுத்தும் அமைப்புகளுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றுகின்றோம் எனவும் தெரிவித்துள்ள உலக வங்கி நாங்கள் இதனை தொடர்ந்து கண்காணிப்போம்,என தெரிவித்துள்ளது.