பரிசுத்தவான்களே! தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கம் பேணத் தவறும் நீங்கள் உங்களைக் கல்லால் அடித்துக் கொள்ளுங்கள்!

வியாழன் மே 16, 2019

எந்தவிதமான அமைப்புக்களினதோ அல்லது செல்வந்தர்களினதோ நிதி அனுசரணை இன்றி, வணிகர்கள் வழங்கும் விளம்பரங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் தமிழ்த் தேசிய ஊடகம் ஈழமுரசு பத்திரிகை.

 

ஈழமுரசு பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் - செயற்பாட்டாளர்கள் எவரும் ஊதியம் பெறுபவர்கள் அல்ல. எல்லோருமே தமிழ்த் தேசியப் பிரக்ஞையுடன், தமது நேரத்தையும் ஆளுமையையும் ஒதுக்கித் தொண்டு அடிப்படையில் பத்திரிகை வெளிவருவதற்காக உழைப்பவர்கள்.

 

இவ்வாரம் வெளிவந்த ஈழமுரசு பத்திரிகை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவுப் பதிவுகளைத் தாங்கிய சிறப்புப் பதிப்பாக, வழமையை விட அதிக பக்கங்களைக் கொண்ட பதிப்பாக வெளிவந்துள்ளது.

 

இதற்கான அச்சுச் செலவுகளை ஈடுசெய்வதற்கு வழமை போன்று இப் பதிப்பிலும் விளம்பரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 

ஆனாலும் இப் பதிப்பில் காணப்படும் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவுப் பதிவுகள் எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு, அதில் உள்ள ஏனைய விளம்பரங்கள் எல்லாவற்றையும் அலட்சியம் செய்துவிட்டு சிவகார்த்திகேயனும், நயன்தாராவும் நடித்த திரைப்படம் பற்றிய விளம்பரம் ஒன்றை மையமாக வைத்து ஒரு சில புலித்தோல் போர்த்த ஓநாய்கள் ஈழமுரசு மீது சேறுபூசும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

 

பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள், தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கம் - கட்டுப்பாடு உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கண்டிப்பான உத்தரவு.

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒழுக்கக் கோவையில் முக்கியமான விதிகளில் ஒன்று ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட பாலொழுக்கம் சார்ந்தது.

 

அதாவது முறைகேடான பாலியல் உறவு, திருமணத்திற்கு முன்னரான பாலியல் உறவு அல்லது திருமண உறவை மீறிய பாலியல் உறவு, திருமணமாகித் துணைவியார் இருக்க வேறு பெண்ணுடன் தகாத பாலியல் உறவில் ஈடுபடுவது உட்பட சகல விதமான பாலியல் முறைகேடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

 

இவ்வாறானதொரு பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டமைக்காகவே உமா மகேஸ்வரனைத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் நீக்கினார்.

 

தனிப்பட்ட ஒழுக்கம் சார்ந்து தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் எடுத்த இந்த முடிவு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இருகூறாக உடைவதற்கும், உமா மகேஸ்வரன் தலைமையில் புளொட் என்ற போட்டி இயக்கம் உருவாகுவதற்கும் வழிசமைத்தது.

 

இதுதான் துரோகி கருணாவின் விடயத்திலும் நடந்தது.

 

இவ்வாறு தனிப்பட்ட ஒழுக்கத்தில் கண்டிப்பானவராக விளங்கும் தமிழீழ தேசியத் தலைவரை வழிபடுவதாகப் பாசாங்கு செய்து கொண்டு, முறைகேடான பாலியல் உறவில் ஈடுபடும் ஒரு சில புலித்தோல் போர்த்த ஓநாய்கள், ஈழமுரசு பத்திரிகை மீது சேறுபூச முற்படுவது நகைப்புக் கிடமானது.

 

கிறிஸ்துவர்களின் பரிசுத்த வேதாகமத்தில் ஒரு கதை உண்டு.

 

ஒரு நாள் யேசுநாதர் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது பெண் ஒருவரைக் கல்லால் அடித்துக் கொல்வதற்குப் பலர் ஆயத்தமாகிக் கொண்டிருந்ததைக் கண்ணுற்றிருக்கின்றார். உடனே அவர்களிடம் அது பற்றி அவர் வினவிய பொழுது அவர்கள் கூறினார்களாம்: ‘இவள் ஒரு விபச்சாரி. இவளை நாங்கள் கல்லால் அடித்துக் கொல்லப் போகிறோம்.’

 

உடனே யேசுநாதர் அவர்களிடம் கூறினாராம்: ‘நீங்கள் இவளைத் தாராளமாக அடித்துக் கொல்லுங்கள். ஆனால் இவளைக் கல்லால் அடித்துக் கொல்பவர்களில் எவரும் எந்தப் பாவமும் செய்யாதவர்களாக இருக்க வேண்டும்.’

 

அவ்வாறு யேசுநாதர் கூறியதும் செய்வதறியாது திணறிப் போன அவர்கள், அவ்விடத்தை விட்டு நழுவிச் சென்றார்களாம்.

 

இன்று ஈழமுரசு மீது சேறுபூச முற்படும் புலித்தோல் போர்த்த ஓநாய்கள் விடயத்திலும் இது பொருந்தும்.

 

இவர்கள் எவருமே பரிசுத்தவான்கள் அல்ல. இங்கு நாங்கள் குறிப்பிடுவது இவர்களைப் பின்னால் இருந்து இயக்குவோரையும் சேர்த்துத் தான். அதுவும் தனிப்பட்ட வாழ்க்கையில் பாலொழுக்கம் தொடர்பாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள விதிமுறைகளை அப்பட்டமாக மீறி நடக்கும் புலித்தோல் போர்த்த ஓநாய்கள் இவர்கள்.

 

இவ்வாறானவர்கள் ஈழமுரசு பத்திரிகை மீது சேறுபூச முற்படுவதை விடத் தாமே தம்மைக் கல்லால் அடித்துக் கொள்வது சாலச் சிறந்தது.