பரோல் மனு தொடர்பாக காணொலி காட்சி மூலம் வாதிட முடியுமா?

செவ்வாய் ஜூன் 18, 2019

பரோல் மனு தொடர்பாக காணொலி காட்சி மூலம் சிறையில் இருந்தபடியே வாதிட விருப்பமா என்று நளினியிடம் கேட்டு சொல்லுங்கள் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் நளினி. இவர், சென்னை  உயர் நீதிமன்றில்  தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக நான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். என்னுடைய மகள் இங்கிலாந்தில் பாட்டியுடன் வசித்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். அதற்காக சொந்த பந்தங்களில் மாப்பிள்ளை தேட வேண்டியதுள்ளது. எனவே, எனக்கு 6 மாதம் பரோல் வழங்க சிறைத்துறை தலைவர் உள்ளிட்டோருக்கு மனு கொடுத்தேன்.

 


இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. ஆயுள் தண்டனை கைதிகள் ஆண்டுக்கு இரு முறை பரோலில் வெளிவர முடியும். ஆனால், நான் கடந்த 28 ஆண்டுகளாக பரோலில் வராமல், சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளேன். எனவே எனக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்.

இந்த மனு மீதான விசாரணையில், நானே ஆஜராகி வாதிட உள்ளதால், அதற்கு அனுமதி வழங்க சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும்’.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல்குமார் ஆகியோர் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, நளினியை உயர் நீதிமன்றில்  ஆஜர்படுத்த முடியாது. அவ்வாறு செய்தால், தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்காத நீதிபதிகள், ‘நளினியை நீதிமன்றில்  ஆஜர்படுத்த  காவல் துறைக்கு என்ன சிக்கல் உள்ளது?’ என்று கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நளினி தரப்பில் ஆஜரான வக்கீலிடம் நீதிபதிகள், ‘பரோல் கேட்டு தொடரப்பட்டுள்ள இந்த மனுவுக்கு நளினி  உயர்நீதிமன்றில்  நேரில் வந்து தான் வாதிட வேண்டும் என்பது அவசியம் இல்லை.

அவர் விரும்பினால், காணொலி காட்சி மூலம் வாதிடலாம். எனவே, காணொலி காட்சி மூலம் சிறையில் இருந்தபடியே இந்த வழக்கிற்கு வாதிட விருப்பமா? என்று நளினியிடம் கேட்டு சொல்லுங்கள்’ என்று நீதிபதிகள் கூறினர். விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.