பறவைகளை விரட்டும் லேசர் கதிர்!

ஞாயிறு செப்டம்பர் 15, 2019

மக்காச்சோளம் போன்று உயர்ந்து வளர்ந்து கதிர் விடும் பயிர்கள் என்றால், பறவைகளுக்கு படு குஷி. ஆனால், அவற்றை விளைவிக்கும் விவசாயிகளுக்கு பறவைகள் பெரிய தலைவலி.

இதற்கு தான் பல நுாற்றாண்டுகளாக சோளக் காட்டு பொம்மை போன்றவை பறவைகளை விரட்ட பயன்பட்டன. இருந்தாலும், பறவைகள் இது போன்ற பொம்மைகள் ஆபத்தில்லாதவை என்பதை கண்டுபிடித்து, தைரியமாக பயிர்களை சூரையாடுகின்றன.

பறவைகளை பொருத்து, பயிர்களை பொருத்து, 14 முதல், 75 சதவீதம் வரை சேதாரம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுஉள்ளனர். இவ்வளவு சேதத்தை குறைக்க, அமெரிக்காவிலுள்ள ரோட் ஐலண்ட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், லேசர் கதிர்களை பயன்படுத்த முடியும் என, கண்டறிந்து உள்ளனர்.

பயிரின் மேல்மட்ட உயரத்திற்கு கம்பங்களை நட்டு, அதில் லேசர் கருவியை பொருத்தி வைத்தனர் விஞ்ஞானிகள். கம்பத்தில் லேசர் சாதனம், கலங்கரை விளக்கம் போல சுழன்றபடியே இருக்கும். அதிலிருந்து வெளிவரும் லேசர் துடிப்புகள், 600 அடி வரை வீரியமாக வீசக் கூடியவை.

பறவைகள் தானியத்தை கொத்த வந்தால், சட்டென்று லேசர் கதிரைப் பார்த்ததும் மிரண்டு, வேறு பக்கம் வேகமாக பறந்து போய்விடுகின்றன.இதில் பயன்படுவது,ஆபத்தில்லாத பச்சை நிற, எல்.இ.டி.,லேசர்தான் என்பதால்,சூரிய மின்சாரமே இக்கருவிக்கு போதுமானது.ஏற்கனவே,அமெரிக்காவில் சோளக் கருது விளைவிக்கும் விவசாயிகள், இக்கருவியை வாங்கி பொருத்த ஆரம்பித்துவிட்டனர்.