படைப்பாளிகள் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெறுக!

திங்கள் அக்டோபர் 07, 2019

படைப்பாளிகள் மீது தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற்று, அவர்களின் கோரிக்கையில் இருக்கும் தார்மீக நியாயத்தை ஏற்கவேண்டும் என சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வன்முறையும், பாசிசமும் தலைவிரித்தாடி ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து கொண்டிருக்கும் வேளையில் நாட்டில் நடைபெறும் கூட்டு வன்முறைக்கு எதிராகவும், தனி மனித சுதந்திரத்துக்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற போக்கிற்கு எதிராகவும் பலதரப்பட்ட துறைகளை சேர்ந்த இந்த நாட்டின் ஆளுமைகள், படைப்பாளிகள் என 49 பேர் சமூக பொறுப்புணர்வோடு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியதற்காக அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதற்காக படைப்பாளிகள் மீது தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டிருப்பது நாட்டில் ஒரு அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் அமலில் இருப்பதையே காட்டுகிறது. மேலும் இது கருத்து சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட கோரத்தாக்குதல். இந்திய நீதித்துறை வரலாற்றின் மிக மோசமான முன்னுதாரணம். எனவே படைப்பாளிகள் மீது தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற்று, அவர்களின் கோரிக்கையில் இருக்கும் தார்மீக நியாயத்தை ஏற்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.