பதாகை ஏந்துவதால் மாத்திரம் போதையை ஒழித்துவிட முடியாது!!

செவ்வாய் மார்ச் 05, 2019

போதைப் பொருள் மிக ஆபத்தானது; மனித குலத்தையே சீரழிப்பது.இன்று நமது தேசத்தில் போதைப்பொருள் என்னும் சொல் நாளாந்தம் உச்சரிக்கப்படுகிறது.

உலகிலுள்ள எல்லாச் சமயங்களும் போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கான அறிவுரைகளையே வழங்குகின்றன. ஆனால் சமயங்களை பின்பற்றுபவர்களில் பலர் இது விடயத்தில் அலட்டிக் கொள்வதில்லை. போதைப் பொருள் குற்றங்களை பாவமில்லாச் சம்பவம் என்று நினைத்தே இவ்விடயத்தில் நடந்து கொள்வதனையும் அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் தற்போது போதைக்கு எதிரான நடவடிக்கை மிக வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.போதைக்கு எதிரான யுத்தத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்போது ஆரம்பித்துள்ளார்.

போதைக்கு எதிராக வீசப்பட்ட வலையில் அகப்பட்ட மிகக் கூடுதலான தொகை 294கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் ஆகும்.படையினரின் கைகளுக்குள் அது அகப்பட்டுள்ளது. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் பாணந்துறையைச் சேர்ந்தவர்கள்.

இதேவேளை மஹகந்துர மதுஷ் என்பவர் துபாயில் அண்மையில் கைது செய்யப்பட்ட விடயத்துக்கு பின்னர் இலங்கையில் போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புள்ளவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அது மாத்திரமன்றி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறிய, போதைப்பொருள் (கொக்கெய்ன்) பாவிக்கும் அமைச்சர்கள் உள்ளனர் என்ற கூற்றை இலேசான விடயமாக பார்க்கவும் கூடாது.

இலங்கை அரசியல் அரங்கில் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தவிர மற்றைய எல்லோரும் போதைப்பொருள் பாவிப்பதில்லை என்பதனை உறுதிப்படுத்தும் வகையிலான பரிசோதனை அறிக்கையினை சமர்ப்பித்தல் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சமயக் கோட்பாடுகளில் போதைப் பொருட்கள் நுகர்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிகரட், பீடி, புகையிலை வகைகள் கூட தடுக்கப்பட்ட பொருட்களாகவே பார்க்கப்படுகின்றன.

போதைப் பொருட்களின் பெயர்களில் வித்தியாசங்கள் இருக்க முடியும். ஆனால் அவை அனைத்தும் போதையையே பிரதிபலிக்கின்றன. பாடசாலையை அண்டி போதை விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் வருகின்றன.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் வியாபாரம் நடைபெறுவதாகவும் அச்சம் நிலவுகிறது.

போதை நுகர்வுக்குள் அடிமைப்பட்டவர்கள் தங்களை மறக்கின்றனர்.

இதனால் தத்தமது சுயத்தையும் சமூகத்தையும் மறந்து விடுகின்றனர். பொறுப்புகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. போதைக்காக அவர்கள் எதையும் செய்வார்கள். அப்படிப்பட்ட உந்துதலை போதை அவர்களுக்கு வழங்கும்.

இந்த ஆபத்தில் இருந்து சமூகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சமூக, சமய நிறுவனங்களின் கைகளிலும் தங்கியுள்ளது.

போதைக்கு அடிமையான நபர்களை அணுகி அவர்களுக்கு உளவள ஆலோசனை வழங்க வேண்டிய பொறுப்பினையும் இந்த நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்.

அரசாங்கம் போதைவஸ்து பாவனையைக் கட்டுப்படுத்த எடுக்கின்ற முயற்சி பாராட்டத்தக்கது. ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கையினால் இந்த வருடம் 520கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பில் ஆறாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

போதை வியாபாரிகளை பாதுகாப்பதனை விடுத்து, சட்டத்தின் முன் அவர்களை நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுக்கொடுப்பது சமூகநலன் விரும்பிகளின் கடமையாக அமைய வேண்டும்.

போதைக்கு எதிராக வெறுமனே பாதையாத்திரை மேற்கொள்ளுதல், பதாகைகளை ஏந்திக் கொண்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதனால் போதையில் இருந்து மக்களை மீட்டுவிட முடியாது.